மரத்தச்சனும் வனதேவதையும்




                     




சுயவிவரக்குறிப்பு
           ச.இளங்கோமணி, 67ஃ2 சௌக்கத் அலித் தெரு,திருநெல்வேலி-6. செல்நம்பர்:9659940240,9944753350. பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறையில்  உதவிப் போராசியராக சுயநிதிப் பிரிவில் பணி புரிகிறேன். மாணவப் பருவத்திலேயே காதல் காமம்; , ஏழைக்கவிஞன், இரண்டாம் பாகம் ஆகிய கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். என் நெறியாளர் த.கருப்பையா அவர்களுக்காக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  என்ற  ஆவணப்படத்தினை இயக்கியுள்ளேன். மீசை எனும் மயிர்  என்ற ஆவணப்படத்தில் முழுயுரையாடலும் செய்துள்ளேன். கனவு சிற்றிதழில் மைக்காடு மண் எனும் சிறுகதை வந்துள்ளது. நான்காவது நூல் அலங்காநல்லூரும் அடுத்தடுத்த நிகழ்வுகளும் வந்துள்ளது. தச்சு ஆசாரியைப் பற்றிய குறுநாவலே இந்த மரத்தச்சனும் வனதேவதையும். பரோட்டா ஊடுருவலும் சமூக நிலையாக்கமும். தைத் திருநாளுடன் தமிழர் வாழ்வியல், நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ச் சிறுகதையான குளத்தங்கரை அரசமரம் சொல்லும் செய்தியும் விமர்சனப் பார்வையும் போன்ற கலை இலக்கிய வகைமைகள் சார்ந்த கட்டுரைகள் பல எழுதிக் உள்ளேன். முனைவர்பட்டம் புதுக்கவிதைப் படைப்பாளுமைகளின் புதினங்கள் தலைப்பில் ஆய்வுச் செய்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது பத்தொன்பதாம் வயதில் இலண்டன் சுடர்ஒளி கழகத்தால் கவிஞன் பட்டம் பெற்றுள்ளேன்.







 மரத்தச்சனும் வனதேவதையும்;;;





தச்சன் தீவின் மரங்கள் 
வானைத் தொட்டதால் 
பார்க்க வந்த தேவதைகள்
ஒரே நேரத்தில் பூப்படைஞ்சதால்  
பூமி வசமானார்கள்....


மரத்தச்சனும் வனதேவதையும்
1…
        பரபரப்பாக அங்கும் இங்கும் பஸ்கள், கார்கள், சைக்கிள்கள், மோட்டார் வண்டிகள், ஓடிக் கொண்டிருக்கும் கிழக்கு மேற்கு முகமான இந்தத் தார் சாலை. ‘ஒன்றிரண்டு மரங்கள் உலகத்தைக் கேள்விக்குறியாக வைத்திருப்பதைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக எந்தப் பலாபலனையும் எதிர் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கும்.. விஸ்வரூபம் என்பதை இதனிடமிருந்து தான் கற்றுக் கொள்ளுகிறோம்’.
      நேற்று ஞாயிற்றுக் கிழமையானதால் அதிகம் கூட்டமில்லாமல் ஒன்றிரண்டு வண்டிகள் மட்டும் அப்பப்பம் வந்து கொண்டும் போகிக் கொண்டும் இருந்தது. இன்று திங்கட் கிழமையானதால் வேலைக்குப் போகிறவர்கள், பள்ளிக்கூடங்களுக்குப் போகிறவர்கள், கல்லூரிக்குப் போகிறவர்கள் எனக் தனித்தனியான சிறு சிறு கூட்டங்கள் ஆங்காங்கே தென்படுகிறது கண்ணுக்கு நன்றாகவே தெரியும். 
     வேலைமெனக்கிட்டு பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் பிழைப்புக்காக பஸ் ஏற காத்திருக்கும் கொத்தனார், கொத்தனார்களின் கூலியாட்களின் காத்திருப்பும். யூனிபாம் போட்ட சின்ன பிள்ளைகளின் கையைப் பிடித்து கொண்டு அம்மாமார்கள் அவசரமாக கூட்டிப் போவது போல இல்லை. இழுத்து கொண்டு போவது போல பிள்ளைகளின் முகத்தில் எந்த சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆட்டோவில் போகும் தன் கூட படிக்கும் நண்பர்களைக் கூட ‘ஹாய்’ சொல்லுவதில்லை. ஜன நெருக்கடி மிக்க இடமிதென்று சொல்லவும் முடியாது எப்போதும் பல்வேறு தரமான ஆட்கள் வந்து போன வண்ணமிருக்கும் பொதுப் பாதையாக அந்த ரோட்டு பகுதியில் தான் வெள்ளங்கி சுப்ரமணியன் தச்சுத் தொழில் கூடம் என்று பத்துக்கு மூன்று பெரிய சைசில் போர்டு கொண்ட கார்பெண்டர்கள் வேலை செய்யுமிடம் மற்றும் விற்பனை மையமாகவும் இருந்தது. சொந்த ஊர் வெள்ளங்கி மலை பக்கத்தில் இருக்கிற முலைக்கரை என்னும் கிராமம். அதனால் சுப்ரமணிய ஆசாரி ஊர் பெயரும் சேர்ந்து வெள்ளங்கி சுப்ரமணி ஆசாரியாக மாறிட்டார்.
      அங்கே விளம்பரம் இப்படியாக இருக்கும் ~உயர்தரமான கதவுகள், ஜன்னல்கள், நில மரவகைகள் ரெடிமெடாகவும் செய்தும் தரப்படும்| என்றிருக்கும். கடையின் முன்பு வெள்ளச்சாமி ஆசாரி ஒரு பழைய ஹர்குலிஸ் சைக்கிள் வண்டியைக் கடையின் வலது புற சுவர் பக்கம் ஒதுக்கி நிறுத்தி விட்டு முன் பக்கம் வந்து காத்திருந்தார். ~நேரமாகுது இன்னும் ஒருத்தனும் வரல, எங்க போயி தொலஞ்சாங்களோ, நேத்து தண்ணி அடிச்சிட்டு மட்டயா படுத்திட்டாங்களோ தெரியல| என்று மனசுக்குள்ளே புலம்பிக் கொண்டு சின்ன கைபை போலான பேக்குக்குள்ளிருந்து வெத்தலைப் பொட்டியை எடுத்தார். அந்த கேன் பேக்கில் சிறியதான பெயரில் மாரி ஜூவல்லர்ஸ் 56, கூலக்கடை பஜார், திருநெல்வேலி- 6. என்ற பிரிண்டு நிறம் மங்கிய நிலையில் தெரியும். இவர் வயது ஐம்;பத்தைந்துக்கு மேலே மதிக்கலாம்  எப்போதும் ஒரே சட்டையில் தான் வருவார். அது வெள்ளைக்கலராக தான் இருக்கும். ஆனால் வெளுப்பா இருக்காது, வெள்ளை வேட்டி கலரும் அப்படி தான். உடல் எடை அதுவும் ஐம்;பத்தைந்து கிலோ தான் இருக்கும், சிவந்த கருத்த தேகம், வாய் எப்போதும் வெத்தலைப் போட்ட கருஞ்சிவப்பு, வெத்தலைக் கரைப் படிந்த பல், திருநீறு பூசிய நெற்றியில் சந்தன குங்குமம் சிறியதாக வைத்திருப்பார், இதுதான் இவரின் அக்மார்க் அடையாளம்.
      நேரம் ஆக ஆக கூட கொஞ்சம் கோபம் வர ஆரம்பித்தது. ~சனியங்க இன்னும் வர மாட்டுக்காங்க| என்று வாய்விட்டு புலம்ப ஆரம்பித்து விட்டார். 
      திடீரென்று வேகமாக ஒரு எமகா வண்டி மோதுவது போல் அவர் முன் வந்து பிரேக் போட்டு நின்றது. அதிர்ந்து போனார் ஒரு நிமிடம், கெட்டி வைத்திருந்த கோபமெல்லாம் தொலைந்து போனது எங்கோ. பயந்த சுபாவத்தோடு நடுங்கி போனார். சுதாரித்து கொண்டு தொலைந்த கோபத்தை கண்டு எடுத்தது போல..
     ~டேய்!  ஏன்டா இப்படி வாரிங்க|, என்று ஏச ஆரம்பித்தார். ~இன்னும் கொஞ்சம் ஏறினா நான் விழுந்து தான் கிடப்பேன்| 
     ‘அதான் கீழ விழலலா’ என்று வண்டியை விட்டு இறங்கிய படியே சொன்னான் மாணிக்கம் 
     ‘வந்தது லேட்டு அதுல வேற வண்டியவச்சி ஏத்த வராங்க, போங்கடா போயி கடைய தொறங்க’ 
     ‘சரி பெருசு! நேத்து நல்ல கிரிக்கெட் விளையாட்டு’ 
     ‘கல்யாணம் முடிஞ்சி ஒனக்கு என்ன விளையாட்டு’  
      ‘விளையாட்டு ஒடம்ப ஆரோக்கியமா வைக்க தான் பெருசு.. வாரத்துல ஆறு நாள் ஒழச்சி ஒழச்சி தேஞ்சி போயிட.. ஒரு நாள் சந்தோசமா விளையாண்டாதான் என்ன? வேல செஞ்ச களைப்பும் விளையாண்ட களைப்பும் ஒன்னா சேர்ந்து அழுப்பு தர, நைட் சரக்கடிச்சதுல மட்டையாயிட்டேன். எந்திக்க நேரமாச்சி என்ன செய்ய’ என்று சொல்லிக் கொண்டு அந்தப் பெரிய வாசக்கதவைத் திறந்தான் மாணிக்கம். 
      கடையைப் பார்த்தீங்க என்றால் பெரிய பிரம்மாண்டம் என்பதாக தெரியாத பிரம்மாதமான அழகாக தெரியும். உள்ளே உள்ள கதவுகள் வார்னிஸ் பூசப்பட்ட கதவுகள், சிறிய பெரிய ஜன்னல்கள், சிற்ப கலை அம்சத்துடனான கதவுகள், ஒற்றை மற்றும் இரட்டை அன்னங்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும், மரம் கொடி சுற்றிய திராட்சை, சரஸ்வதி, கிருஷ்ணன், மலைக்குன்று ஒவ்வொரு கதவையும் தூக்கி காட்டி காந்தம் போல இழுக்கும். இது எல்லாம் முதல் தளப்பகுதி. அதற்கு  கொஞ்சம் உயரமான பகுதிக்கு ஏற படி கட்டுகள், படிகட்டில் ஏற சின்ன சின்ன இடைசிறுத்த கம்பு கடைசல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு படிக்கட்டிலும் பளபளக்கும். மேலே ஏறினால் மரப்பீரோல் கண்ணாடி வச்சதும் இல்லாததும். தேக்குக் கட்டில் என வெளியே போகிறவர்களின் கண்களில் தென்படும் விதமான கலைக்கூடமாக காட்சி அளிக்கும். தரைத்தளத்தில் ஓரமாக தச்சுவேலை நடக்கும் இடமாக உள்ளது. 
      ‘ஏம் பெருசு! இவ்வளவு சிக்கிரமா வந்து என்னயா செய்யபோற ….. உளிய தேய் தேய்னு தேய்சி, ரெண்டு ஜன்னல் மட்டும் ரெடி பண்ணப்போற, அதுக்கு ஏன்யா இவ்வளவு அவசரம்’.
      பெரியவருக்கு இதை கேட்டு கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் எப்போதும் வைக்க வேண்டிய இடத்தில் போயி தான் கேன்’ பேக்கையும் சாப்பாட்டு கேரியரையும் வைத்து விட்டு, சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்க போட்டுவிட்டு முக்கா இஞ்சி, மூனு இஞ்சி, ஒன்னேகால் இஞ்சி, ரெண்டு இஞ்சி உளிகளை எடுத்து கொண்டு வேலையில் இறங்கிவிட்டார்.  
      ஒரு பெரியவரை கிண்டல் அடிக்கிறோம் என்ற எந்த சலணமுமில்லாமல் போன மாணிக்கத்துடன் ஆறுமுகமும் மரக்கட்டைகள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓரம் சென்று பேண்டை களற்றிட ஆறுமுகம் சாரத்துக்கு மாறினான், மாணிக்கம் சாமி வேட்டிக்கு மாறினான். முந்திய நாள் சனிக்கிழமை விட்டு போன வேலைகள் அப்படியே கிடக்க, தரவாரியான உளி, சுத்தியல்களை எடுத்துக் கொண்டு வேலை களத்தில் இறங்கும் முன். உளி தேய்க்கிற கட்டைப் பக்கம் சென்றான். முகத்தில் ஏனோ தெளிவு இல்லை உள்ளே வந்த இன்னொரு தொழிலாளி சுப்பையா… 
      ‘ஏம்பா… இன்னும் பதினாறு நாள் தீட்டு முடியல அதங்காட்டியும் சாமி வேட்டி கெட்டிக்கிட்டு. இரத்த வாடை உன்ன சுத்தி எப்படி போகும்.  என்ன?அத்தான் நீங்களாவது சொல்லக் கூடாதா’. என வெள்ளச்சாமியைப் பார்த்து சொல்லிட்டு. போப்பா போய் மாத்து 
     மாணிக்கத்துக்கு பெண் குழந்தை பிறந்து பதிமூன்று நாள் தான் ஆகுவதால்…
      சுப்பையா வெள்ளச்சாமியை அத்தான் என்பதும். வெள்ளச்சாமி சுப்பையாவை மாப்பிள்ளை என்பதும் பெண்ணு கொடுத்து வாங்கிய உறவுஅல்ல தூரத்து உறவு முறையாகும்
      வேறு சாரமில்லாததால் ஆறுமுகத்தைக் கூப்பிட்டு அவன் உடையையும் இவன் உடையையும் மாற்றிக் கொண்டார்கள்
      எடுத்து வைத்த உளிகளை சாணகட்டையில் சீனிக்கல் தூள் தூவி உளியைத் தேய்த்து பதமாக இருக்கிறதா என்று தடவி பார்த்தான். உறத்து காய்ச்சி போன கைகளின் இடது கை ஆள்காட்டி விரல் முனை பக்கம் லேசாக உளி வைத்து உரசிப் பார்த்தான்..
      ‘டேய்…மாடசாமித்தேவர்  கெட்டுற வீட்டுக்கு இன்னைக்கு நில போகனும் போன வாரமே சொல்லிட்டு போயிட்டாரு’ என்று  பெரியவர் ஞாபகப்படுத்த, மாணிக்கம் மனச மீட்டு வந்து  ஆறுமுகத்தைக் கூட்டிக் கொண்டு மாடசாமித்தேவர் எடுத்து வைத்த நில கட்டையை எடுக்கப் போனார்கள். கனம் சரியான கனம் தேக்குலா.. தரமும் கனமும் கூடியதால் இதனை மரங்களின் ‘ராஜா’ என்று கூறுவார்கள். தூக்க முடியாததால் சுப்பையாஆசாரியும் மரத்தின் மத்தியில் கையைக் கொடுத்து தூக்கி, மரம் அறுக்கிற மிஷின் முன் வைத்து, டேப்ப வைத்து அளவு பார்த்து எத்தனை அடி வாசல், எவ்வளவு இஞ்சி மண்ணுக்குள் போகும், மேல கீழ சரியா அளவு பார்த்து வெட்டி எடுக்கும் போது..
     மாணிக்கம்  ‘இருக்க வச்சி செஞ்சி கொடுத்திடலாம்’ என்றதும் 
     ‘போடா போ.. எல்லாம் ரெடி பண்ணி, வேலையை முடிச்சி வச்சா தான் நல்லது. நல்ல நேரத்துல நிலய எறக்க வேண்டாமானு… சண்டைக்கு வருவாங்க’என்றார் ஆறுமுகம்.  
     பன்னிரண்டு வயசு மதிக்க தக்க மணி என்ற பையன் வந்து நின்றான். ‘ஏம்பா… ஒனக்கு ஏன் இவ்வளவு நேரம்.. பட்டறை பையனா ஒழுங்க வந்து.. தூத்து, தொளிச்சி.. எடுத்து வைக்க வர வேண்டாமா.. போய் சீக்கிரமா ஒன்! வேலய முடிச்சிட்டு வா..’ என்றார் சுப்பையாஆசாரி.
   

வீடு குறீயிடு  வாசலுக்கு வெளியே 
வீடே  குறியிடுகை தச்சன் வாழ்வில்...
  
2…
     பெரிய நில ரெண்டு, சின்ன நில மூனு, உயரம், அகலம் என்று சின்ன பேப்பரில் எழுதியிருப்பதைப் பார்த்து சரி பார்த்து எடுத்து வைத்தான் மாணிக்கம்.
     ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நில கம்ப எடுத்துக்கிட, மூலமட்டம் வைத்து கோடு போட பென்சில் எடுத்தான். பக்கத்தில் இருந்த மேசையிலிருந்து. கோடு போட்ட பின் அது பாட்டுக்கு அனிச்சையாய் காது ஓரத்தில் போகி உட்கார்ந்து கொண்டது. 
     தட்டு அளந்து, (கதவு சேரும் பகுதி) பிரம்பு  (மொலிக்கி எடுத்தது போல முன் பகுதியில் இருக்கும்)அளந்து கோடு போட்டு செவ்வக சைஸ்ல ஓட்டையை போட்டு, இரண்டு கம்பையும் இணைத்து மூலமட்டத்தால் ஏற்றம் இறக்கம் பார்த்து. அடிப்பகுதியில் ஒரு கனத்த ரீப்பர் வைத்து அடிக்கும் போது..
      ‘ஏய்… மாப்ள! பெரியவரு ஒன்னும் பேச மாட்டுக்கிறாறு எதையாவது பேசிக்கிட்டு இருப்பாறு, வெத்தல ஜாஸ்தியாயிட்டா’ என்று வம்புக்கிழுத்தான் மாணிக்கம். 
     ‘டேய் .. அய்யாவுக்கு டீ வாங்கிட்டு வா’…என்றான் ஆறுமுகம்.   
     ஆறுமுகத்தைப் பார்த்து ‘வாய் கிழிய பேசுவான். சொன்னதை செய்ய மட்டான்’..என்று சுப்பையாஆசாரி முனுமுனுத்து கொண்டு ‘ஏன்டா ! செவனேனு தாண்டா அவரு இருக்காரு, அவர ஏன்டா.. வம்புக்கிழுக்கிறீங்க’ என்று ஆதரவு குரல் வந்ததும்  வெள்ளச்சாமிக்கு தெம்பூட்டியது.
     வெத்தலைப் பொட்டியை எடுத்து வெத்தலைப் போட ஆரம்பித்தார். அண்ணாச்சி இருங்களேன் ! ‘டீயை குடிச்சிட்டு வெத்தலைப் போடுங்க.. கடைக்கு முன்னாடி காக்க வச்சிட்டேனு கோபமா? அண்ணாச்சி’ என்றான் மாணிக்கம். பாசமாக பேசும் போது அண்ணாச்சி என்ற வார்த்தை மரியாதையாக வந்து விழும்.
     மணி மெதுவாக எழுந்து தூக்கு சட்டியை எடுக்க 
     ‘சீக்கிரமா போயிட்டு வாடா’ என்று கட்டளையிட்டான். துட்ட எடுத்து கொடுத்து அனுப்பினான், ‘கம்பெனி கணக்குல பொறவாட்டி குடிச்சிக்கலாம்’.. என்றான் மாணிக்கம். 
     மனஸ்தாபத்தைக் குறைக்க கடை திறந்து கொஞ்ச நேரத்தில் டீ கிடைக்கிறது.
     ‘சீக்கிரமா வேலைய பாருங்கடா நில கேட்க ஆள் வந்திரப் போறாங்க’…வெள்ளச்சாமி படபடத்தார். 
      எந்த ஒரு பயமும் இல்லாமல் மாணிக்கமும் ஆறுமுகமும் இருந்தனார். 
     நான்கு நில ரெடி பண்ண வேண்டிய இடத்தில் ஒன்று தான் சரியாய் முடிந்திருக்கு, விளையாட்டு பிள்ளைகளா யிருக்காங்க, கிராக்கி எப்போது வரும்  எந்த நேரத்தில் வருவாங்க வெள்ளச்சாமிக்கு நல்லாவே தெரியும். இது வேலை சொல்லிக் கொடுத்த பாடமல்ல! அனுபவம் சொல்லிக்கொடுத்த பாடம் .. வயதானதால் கனத்த வேலையைச் செய்ய முடியாமல் சின்ன கதவு, ஜன்னல் என்று செய்து கொண்டிருந்தார்.
      ‘வேலையைப் பாருங்கடா..’ என்றார்.   
      ‘ஏய்யா.. நீ வீட்டுக்காரன விட அவசரப்படுவ போலிருக்கே’ என்று ஆறுமுகம் மிஷினால் பிரம்பு போட்டு கொண்டே சொன்னான்.
     அந்த நேரத்தில்  டி.ஓ.டி போன் அழைக்கும் சத்தம் கேட்டு மாணிக்கம் எழுந்து போயி போன் ரிசீவரை எடுத்து பேசும் போது, சுப்பையாபிள்ளை எதிர் பகுதியில் இருந்து பேசினார்.. ‘ஒனர் போன் போட்டாரு, இன்னும் கொஞ்ச நேரத்துல நிலெ எடுத்துட்டு போக மாடசாமித்தேவர் ஆட்கள் வாராங்கலாம்’ என்றார்..
      ‘இப்பம் வாராங்கனு சொல்லுற, மொத நெலயே இப்பம் தான் முடியுது, போன் போட்டு சாய்ங்காலம் வர சொல்லு’.
      ‘டேய்.. காசு கொடுத்து முடிச்சிட்டாரு, கேட்கிற நேரம் கொடுக்கனும்  போயி ரெடி பண்ணு’.  போன் கட்டாகிட
      சுப்பையாப்பிள்ளையை ஏசி கொண்டு ‘எண்ணே! சுப்பையாண்ணே! இந்த நில வேலையை மொத முடிச்சிடுவோம். அப்புறம் மத்த வேலைய பாப்போம்’. என்றதும் சுப்பையாஆசாரியும் இணைந்து கொண்டார். 
     டீ வாங்கி வந்த  மணி, டீயை ஒவ்வொரு டம்ளாரில் ஊத்துவதற்கு முன் மரத்தூள் படிந்ததை கழுவிட வாளி தண்ணீரில் கழுவினான்.
     ‘ஆக்கங்கெட்ட கூவ! வெளியே போயி கழுவிட்டு வாடா’ என்று ஏசினார் வெள்ளச்சாமி. இந்தத் தூசி படிந்த வாழ்க்கையோடு இத்தனை வருடம் கடந்திருப்பதில் எந்த சந்தேகமுமில்லை. 
    இந்த நேரத்தில் கடை முதலாளி கணேஷன் காரில் வந்து இறங்கினார். கடைக்குள் நுழையும் போது, வாசலை தண்ணீர் தொளிச்சானா.. பட்டறை வேலைகள் நடக்குதா.. சுத்தமா தூத்து இருக்கா.. கண்ணாடி மேசைகள் துடச்சிருக்கா.. என்று ஒவ்வொன்றையும் நோட்டமிட்டு கொண்ட படி ஏறி போவது, இவரின் இயற்கையான குணம்.  
     வந்ததும் தன் இருக்கையின் பின் பக்கம் பெரிய அளவிலான நான்குக்கு  மூன்று அடி உயரமுள்ள வெங்டாசலபதி படத்தை மௌனமாய் நின்று ஏதோ முனுமுனுத்து கைக் கூப்பி வணங்கி கும்பிட்டார். 
      யாருக்காக வேண்டுகிறார் என்று இது நாள் வரை யாருக்கும் தெரியாது. ஆமாம்.. இந்த வேண்டுதல் மொழி யாருக்காக.. வேலை செய்யும் தொழிலாளி நல்லா இருக்க வேண்டுமென்று வேண்டுகிறாரா.. கடை நல்லா இருக்க வேண்டுமென்று வேண்டுகிறாரா.. தன் வீட்டில் உள்ளவர்கள் நல்லா இருக்க வேண்டுமென்று வேண்டுகிறாரா.. கஷ்டமர்கள் பெருக வேண்டும் வியாபாரம் ஓங்க வேண்டுமென்று வேண்டுகிறாரா.. என்னிடம் தான் எல்லா ஆட்களும் வர வேண்டுமென்று வேண்டுகிறாரா.. என்பது இது நாள் வரை யாருக்கும் தெரியாது. இனியும் யாருக்கும் தெரியப் போவதில்லை. எந்த முதலாளி வேண்டுதல் வெளிப்படையாக இருந்திருக்கு….இவர் மட்டும் அதில் விதிவிலக்கா. என்று யோசிக்க வைத்தது ஆறுமுகத்திற்கு.
      பூ போட்டு, பத்தி பொருத்தி, சூடம் கொளுத்தி, சாம்பிராணி காட்டி சாமி கும்பிட்டு முடித்து விட்டு அப்புறமாக பேச ஆரம்பித்தார்
      ‘ஏய்  மாணிக்கம் மாடசாமித்தேவர் கெட்டுற வீட்டுக்கு நில ரெடியாயிட்டா ஓன்ட சனிக்கிழமையே சொன்னமுலா’.. 
      எல்லாம் தெரிந்து வந்து தான் கேட்கிறாரு. கேட்கவும் சொல்லிருப்பாரு. என்று மனசுக்குள் புழுங்கினான்.. மாணிக்கம்.
      ‘இல்ல மாமா முடிஞ்சிட்டு இருக்கு .. அதைத் தான் பாத்துட்டு இருக்கோம்’
      ‘ஏன்டா .. சொந்தக்கார பையனா இருக்கானு ஓன்ட எல்லா பொறுப்பையும் கொடுத்தா .. இப்படி மெதுவா செய்யுற.. சீக்கிரமா வேலைய பாரு வந்திரப்போறாரு. 
       சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தான் கொடுத்தார். ரெண்டு நாளுக்கு முன்ன கொடுத்தா என்ன? ஞாயிற்றுக்கிழமை வெட்டியா ஊர சுத்துரத தடுக்க இதை இப்படி செய்திருப்பாறோ? போன திங்கட்கிழமையே அட்வான்ஸ் வாங்கி புதன்கிழமை புல் செட்டில்மெண்டும் ஆயிருச்சி, புதன் கிழமையிலே கொடுத்திருக்கனும் ஏன்? சனிக்கிழமை மதியம் கொடுக்க வேண்டும்? கல்யாணம் முடிஞ்சியும் வெளையாட போறேனே அதை தடுக்கவா? குழப்பத்துடன் இன்னும் மனசுக்குள் பேசினான்… சொந்தக்கார பையன்னு நம்மட்ட மட்டும் பேசிக்கிடுவான். கடைகணக்கு பார்க்கும் சுப்பையாப் பிள்ளை வச்சி எல்லா காயையும் நகர்த்துவார் 
      ‘ஏய்   இங்கே பாரு’.. என்று ஆறுமுகம் சொல்லும் போது தான், சுய நினைவு வந்தது நேரா பிடித்தான். 
      டீ டம்ளாரில் டீ ஊற்றி போன எதிர்கால கார்பெண்டர் மணி சின்ன பையன் தான். ஏழு வரை படித்து விட்டு படிக்க வசதியில்லாமல் குடும்ப வாழ்க்கைக்காக இந்த வேலைக்கு தள்ளப்பட்டான். இது குடும்ப தொழில் தான் என்றாலும் கொஞ்சம் பத்து வரையாவது படித்து இருக்கலாம், கொஞ்சம் ரோசக்கார பையன் பழைய பேண்டு ஒன்று எப்போதும் அதைத் தான் போட்டு கொண்டு வருவான் .பல நாட்களாக ஒரே மாதிரி தெரியும், ஒரே பேண்டு போட்டு சமாளிக்கிறாயா என்று கேட்டா? நேத்து போட்டது வேற, இன்னைக்கு போடுறது வேற என்பான். இரண்டு பேண்டு  நான்கு சட்டை இதைத் தவிர வேறு எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. 
       இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே.. கடை வாசல் பக்கம் ஒரு குட்டியானை வண்டி வந்து கீ…..கீ… என்று ஹாரன் அடித்தது. 
      என்னய்யா.. என்பது போல சுப்பையா ஆசாரி சைகையில் கேட்டார்.
      ‘வண்டி டோர் வழியே தலையைக் காட்டி நிலெ எடுக்க வந்திருக்கேன்’.. இன்ஜின் சத்தத்தை விட அதிகமாக  
     ‘வெளியே வண்டியை நிப்பாட்டு’.. சுப்பையாஆசாரி ஆணையிட்டார். 
     காலையிலேயே இவ்வளவு வெயிலானு சொல்லிக் கொண்டு உள்ளே வந்தான். தன் காக்கி சட்டையைத் தூக்கி விட்ட படி உட்கார்ந்தான். அங்கிருந்த மரக்கட்டையில்., கேட்டு உட்கார வேண்டுமென்ற எந்த அனுமதியும் இதுபோலான தொழில் கூடங்களில் கிடையாது.
     ‘வேல நடந்திட்டு இருக்கு. போயி ஒரு டீ யை குடிச்சிட்டு வா!’ சுப்பையாஆசாரியின் சொல் அவனை எழ வைத்தது.
      ‘என்னய்யா… அவரு ரெடியா இருக்கும் கொண்டு வந்துருனு அனுப்பினார் இத முடிச்சிட்டு அடுத்த சவாரிக்கு போனும்’ இழுத்தான் வண்டிக்காரன்.
       ‘எங்க உங்க அடுத்த சவாரி பத்தி தெரியாதா..இந்தா போயி பாய்கடையில ஸ்டாங்கா ஒரு டீ அடி’.. என்று பத்து ரூபாயை கையில் திணித்தான் மாணிக்கம்.
    தெரிந்தவர் தான் இப்படி வருவார் தெரியாதவர் வந்தாலும் பழகி கொள்வார்கள்.
    இரண்டு நில வேங்கை மரம், வாசல் கதவு தேக்கு மரம், விட்டுக்கு நடுவில் வேம்பு மரம் இது மாடசாமித்தேவர் கொடுத்த ஆடர். மணி வைத்த டீயைக் குடிக்காமல், புகைந்த பீடியைப் புகைக்காமல் வேக வேகமாக நில உருவாக்கும் வேலை நடந்தது… கொஞ்ச நேரத்தில் வானம் கருக்க ஆரம்பித்தது. இன்னும் போக போக இருள தான் செய்தது. 
    ‘காலையில நல்ல வெயிலா இருந்தது கொஞ்ச நேரத்துல அப்படியே க்லைமேட் மாறிட்டு’ பீடியைக் குடித்து புகைத்தப் படி ஊதிக் கொண்டு வந்து உட்காரும் போது.. டோயோட்டா கார் வந்து நின்றது. வண்டியிலிருந்து வெள்ளை சட்டையுடன் வேட்டியை மடித்து கெட்டிக் கொண்டு, கழுத்தில் தடியான தங்க செயின், கையில் கைசெயின் மினுங்க, நான்கு இஞ்சி சைஸ்ல பெரிய மோதிரம் ஒன்று, நவரத்தின மோதிரம் ஒன்று, கலைஞர் படம் போட்டமோதிரம் ஒன்று கைவீசி நடந்த படி கடைக்குள் வந்தார் மாடசாமித்தேவர்.
     வந்ததும் வாங்க என்பது போல கைக்குப்பி உட்கார சொன்னார் கணேஷன் உடனே ‘அய்யாவுக்கு ஏதாவது குடிக்க வாங்கிட்டு வா’… என்று மணியைப் பார்த்து கூற.
     ‘இல்ல அதல்லாம் ஒன்னும் வேண்டாம்’ என்று ‘ரெடியாச்சா’ என்றார் மாடசாமித்தேவர்
      இதோ! ரெடியாச்சினு சுப்பையாப்பிள்ளையைப் பார்க்க, சுப்பையாப்பிள்ளை எந்திருச்சி தச்சு வேலை நடக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தார்
      நிலெக்கு தட்டு போட்டு கொண்டிருந்தார்கள் மூன்று பேரும் பிரம்பு என்ற பகுதி நிலெக்கு முன்னால் அமைவது, தட்டு இது கதவு சாத்தும் போது கதவையும் நிலயையும் ஒன்றிணைக்குமிடம். நேர்கோடு போல, அளவான தின்மத்தில், சரியான அளவில் அமைக்க வேண்டும்.. சுப்பையாபிள்ளை சீக்கிரம்யா என்றார்.. 
      ‘நாலு கையா இருக்கு படபடனு அடிக்க’ சுப்பையாஆசாரியின் நக்கல் தொனி வெளிப்பட்டது. 
      கொஞ்சம் நேரம் ஆனதால் மாடசாமித்தேவரே எழுந்து வர ஆரம்பித்தார் வேலை செய்யுமிடத்திற்கு 
      ‘என்னய்யா.. வேல இன்னும் முடியலையா’ .. மாடசாமித்தேவர் கடுகடுக்க. கோபம் வருவது போல லேசா வெளியே தெரிந்தது 
      ‘அய்யா … அய்யா .. நான் தான் வேலையைக் கொஞ்சம் நேரங்கழிச்சி செய்ய சொன்னேன்’ எனப் பொய் சொன்னார் வெள்ளச்சாமிஆசாரி. முதலாளி கணேசனுக்கு தொழிலாளியிடம் கோபம் காட்டமுடியாத நிலவரம்.
      ‘ஒங்க அப்பா காலத்தில இருந்து உங்கிட்ட தான் என்! வீட்டுக்கு கம்பு, கதவு எல்லாம் எடுக்கிறேன்’ மாடசாமி பட படத்து பொறிய ..
      நிதானமாக  பயமே இல்லாமல் ‘அய்யா ஒரு குடும்பம் வாழப்போற வீடு நல்ல நேரம் சகுணம் பார்ப்பதை விட, பகலில் தான் உளி நேர்கோட்டில் பார்த்து சுத்தியல் அடி அடிக்க வேண்டும், கோணல் மானலா அடி விழுந்திரக் கூடாது, பார்க்க நல்லா இருக்காது. எந்த ஆசாரி செஞ்சானு கேள்வி வந்திரும். காட்டுல இருந்து வர மரம், ஒன்னுகடக்க ஒன்னு ரத்த கோரப் பார்த்திடக் கூடாது என்று வெள்ளச்சாமி பேச பேச மாடசாமித்தேவர் மௌனமானார்.
      ‘சரிய்யா நல்ல நேரம் பார்த்து எறக்க வேண்டாமா’ மாடசாமித்தேவர் பம்மி பேசினார்.
      ‘மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல…. நிரஞ்ச பௌர்ணமி இன்னைக்கு தொடங்குது,  பன்னிரண்டு மணியில இருந்து ஒரு மணிக்குள்ள எறக்குங்க.. எறக்கும் போது ஒரு எலுமிச்சைப் பழத்தை வீட்டு வாசலில வச்சிட்டு எறக்கி வீட்டுக்குள்ள ஏத்துங்க, அமோகமா இருக்கும். சொன்ன மாத்திரம் மாடசாமித்தேவருக்கு முகமலர்ச்சி வந்தது.
      ‘அப்பம். ஒரு மணி நேரத்துக்கு இங்க உட்காரனும் என்ன செய்ய.. யோசிக்க ஆரம்பித்தார் 
       வேலை செய்ய இனி எந்த இடஞ்சலுமில்லை என்று பெரும் நிம்மதி வந்தது, இங்குள்ளவர்களுக்கு.
       டீ எல்லாம் அப்படியே ஆடைபடிஞ்சி நிக்க, ஒருத்தரும் குடிக்கலையா? மரக்கட்டைகளுக்கு மேலே இருந்த டீ டம்ளாரைப் பார்த்து கேட்டார். மாடசாமித்தேவர்
       ‘வேல மும்முறத்துல’ …என்று இழுத்தான். ஆறுமுகம்
       ஏ! பையா இங்க வா! எல்லாருக்கும் பூஸ்டோ, போன்விட்டாவோ  கூட நூறு அல்வா ஒவ்வொருத்தருக்கும் வாங்கி கொடு’...  என்று முன்னூறு ரூபாயை  எடுத்து கொடுத்தார். 
       மணி திகைத்து முழித்து முதலாளியைப் பார்க்க… ‘வாங்கிக்கோ!  எல்லாத்துக்கும் வாங்கி கொடு நீயும் வாங்கி சாப்பிடு’ என்றார். வழக்கம் போல தூக்கு சட்டி எடுக்க திரும்பியவன். அதெல்லாம் வேண்டாம் தனிதனியாய் வாங்கிட்டு வா போவதற்கு முன்னாடி இந்தப் பழைய டீயை தூர ஊத்திட்டு போ. 
       கருணை முகமாய்  வெள்ளச்சாமியைப் பார்த்தப் படி வேலை செய்த மாணிக்கம் ..அவர் டீ டம்ளர் மட்டும் காலியாக இருந்ததால் அதை மணி எடுக்கும் போது . டேய் எனக்கு டீ வேண்டாம் வெத்தலை போட்டு பேசி முடிந்த களைப்பில் இரண்டாவதாகவும் வெத்தலையில் சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போனது.
       இதை கேட்ட மாடசாமி ‘ஏ ! பையா அவருக்கு பிடிச்ச வெத்தலை பாக்கு வாங்கி கொடுத்திடு’ என்றார். 
      ‘இன்னைக்கு வெத்தலைக்கு காசு செலவழிக்க வேண்டாமுனு மனசுக்குள் எண்ணினார்’ வெள்ளச்சாமி. 
      ‘வெத்தலை வாங்கிட்டு வரும் போது அதே! கடையில் எலுமிச்சை பழமும் இருக்கும் தடிசா பாத்து ஒன்னு வாங்கிட்டு வந்திருன்னு வெள்ளச்சாமி மீண்டும் ஞாபகப் படுத்த பெறுத்த மகிழ்ச்சியுடன். மேல ஏறி கதவு ஜன்னல்களைப் பார்க்கலாமா? கேட்டார் மாடசாமித்தேவர்
       போன பையன் ஐந்து காம்பிளான் வாங்கி வந்து கொடுத்தான் எல்லோருக்கும். ‘ஏம்பா! ஒனக்கு வாங்கலையா’ என்றார் சுப்பையாஆசாரி.  கடையிலையே குடிச்சிட்டேன் என்று சொல்லிக் கொண்டு அல்வா பொட்டலத்தையும் கொடுத்தான். மாணிக்கம் மணியைப் பார்த்து ஒரு கிளாஸை எடுத்திட்ட வாடா’ எனக்கு ரொம்ப வேண்டாம் நீயும் கொஞ்சம் குடி என்றான் 
       வாங்கி குடிக்கும் மணியைப் பார்த்து இவன் குடிச்சிருக்க மாட்டான். இவன பத்தி நமக்கு தெரியாதா என்று எண்ணினான்.
        மணியைப் புரிந்த ஒரே ஆள் மாணிக்கம் மட்டும் தான். சில்லறை காசு கிடச்சாலே சேத்து வைக்கிறவன் ஒரு காம்பிளான் பதினைந்து ரூபாய் வரும் எவ்வளவு சந்தோசத்துல எடுத்து வச்சிருப்பானு நினைத்து கொண்டான்.     
        நில கம்பில் தட்டு போட்டு, பிரம்பு போட்டு, கீழே ரிப்பர் வைத்து அடித்து ரெடியா வைக்கும் நேரமும், மேலே கதவு ஜன்னல் பார்க்க போன மாடசாமித்தேவர் பார்த்திட்டு வர நேரமும் சரியாக இருந்தது.
       ஆறு இன்டு பத்து அறுபது, வெத்தலை பத்து, பாக்கு ஐஞ்சி, அல்வா எழு இன்டு முப்பது எரநூத்தி பத்து எலுமிச்சை ஐஞ்சி ஆக எரநூத்தி தொன்னூறு ரூபாய் என்று மீதி பத்து ரூபாயை மாடசாமித்தேவர் முன் நிட்டினான். 
      ‘நீயே வச்சிக்கோப்பா’.. செய்கை செய்தார். 
      பேசிக்கொண்டிருந்த வாக்கில் வேலையை முடித்திருந்தனர். ‘தூக்க நாலுபேர் வேணும்’ என்றதும். தன்னுடன் கூட்டி வந்த ஆட்கள் வெளியே கார் பக்கம் வெட்டியாய் தம் அடித்து பேசிக்கொண்டிருந்தவர்களை கை காட்டி கூப்பிட்டார்
       விரைவாக வந்தவர்கள் சொல்லும் முன்பாக வேலையில் இரங்கி விட்டார்கள். அசையாமலிருக்க சாக்கு போட்டு வைத்தார்கள் 
       பார்த்து கொண்டே இருந்த மாடசாமித்தேவருக்கு நில எடுக்க வரும் போது  வெள்ளச்சாமி சொன்ன மந்திர உபவாசம் மின்னலிட்டு போனது… ‘தேக்கு மரத்துல நெல விட்டா பெருமை தான் ஆனா… வீட்ட காப்பாத்த வேம்பு மரநெல ஒன்னு எங்கையாவது வையுங்க’ என்றதால் வேம்பும் வண்டியில் எறுவதை பார்த்தார். 
      ‘சொன்னது ஞாபகமிருக்கட்டும் நாளைக்கு ஒரு ஆசாரியை அனுப்பி வை! காலையில எட்டர மணிக்குள்ள ஆரம்பிக்கனும்’ என்று காரில் ஏறினார்.
     
    நாளை யார்? போவார் .. என்று யூகிக்க இடமில்லாது போனது… ஆறுமுகம் இளந்தாரி, மணி சின்ன பையன், சுப்பையாஆசாரி போகலாம் அவர் சாமியாடி பெத்த பிள்ள ஆனாலும் நாளைக்கு சாம்பவர்வடகரையில ஒரு கல்யாணமிருக்கு, மாணிக்கம் பிள்ளபெத்த தீட்டு கழியாம போக முடியாத சூழல் …. இப்போது எந்தக் காரியங்களுக்கும் போகாத வெள்ளச்சாமி ஆசாரியே அனுப்ப வேண்டுமென முடிவெடுத்தார் முதலாளி கணேசன்.
     மதியம் சாப்பிட்டு முடித்து விட்டு வேலைத் தொடக்கம் மெதுவாக நடந்த வண்ணமிருந்தது. ‘நாளைக்கு நான் வரமாட்டேன், சாம்பவர்வடகரையில ஒரு கல்யாணமிருக்கு, தாய்மாமன் மொறைக்கு நிக்கனும், ஆறுமொகம் நீ போயிட்டு வந்திடு போகும் போத மணியையும் கூட்டிக்கிட்டு போ! எதாவது கை செலவுக்கு கிடைக்கும்’ என்றார் சுப்பையாஆசாரி.
     ‘போகும் போதும் சரி. போயிட்டு வரும்போதும் சரி. அவர் வீட்டுக்கு போவதுக்கு முன்னாடி இருக்கிற போச்சிஅம்மனுக்கு சூடம் கொளுத்தி வச்சிட்டு போ!’ என்று வெள்ளச்சாமி வெத்தலை வாயுடன் பேசினார். 
     கடை மூடுவதற்கு முன் முதலாளி கணேஷ், வெள்ளச்சாமியைப் பார்த்து ‘நாளைக்கு அய்யா நீங்க போயிட்டு வாங்க! சின்ன பையன அனுப்பிட்டாருனு கோவப்படுவார், நீங்க போனா அவர சமாளிச்சிடுவிங்க’.
     வெள்ளச்சாமி ‘இல்லப்பா வயசானதுகப்புறம் இந்த மாதிரி வேற எங்கையும் போறது வரது இல்ல’.. என்று சொன்னார்.
     ‘இந்த ஒருமுறை போயிட்டு வாங்க.. கூட ஆறுமொகத்த கூட்டிட்டு போங்க. ஆறுமொகம் நீ அய்யாவை ஒன் வண்டியில வச்சி கூட்டிட்டு போயிட்டு வா!.. என்ற கணேஷின் ஆணை சரி என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. தலையாட்ட மட்டுமே செய்தான் தனியா போனா தட்சன ஏதும் கெடைக்கும் இப்பம் கூட போன என்ன கெடைக்கும்’ மனசுக்குள் புலம்பினான் யாருக்கும் தெரியாமல். பெரியதாக ஆசைப்படும் ஆறுமுகம் என்னும் பெரிய யானைக்கு சிறு சோலப்பொரி உணவாக முடியுமா?.. மணியாவது வறுமையால் ஆசைப்பட்டு சேர்க்கிறான். ஆறுமுகம் பணம் தேடி எதையும் செய்வான்.
     மணி போற வாய்ப்பு பறிபோனதால் ‘நாளைக்கு ஒங்க ரெண்டு பேருக்கு தான் அதிக வேலையிருக்கு .. மத்தவங்க வரதுக்கு லேட்டாகும்..சீக்கிரம் வந்திரு’ என்று கிளம்பினார் கணேஷன் முதலாளி.

பெரும் கூச்சலிட்டு அழைக்கின்ற மரங்கள்
வீட்டிற்குள் அடங்கி போனது தச்சனால்..
         
3…
      ஆறுமுகம் தனது டி.வி.எஸ் ஃபிப்டி மோட்டார் சைக்கிளுடன் வெள்ளச்சாமி ஆசாரி வீட்டு முன்பு வந்து நின்றான். நிலவிடப் போகி பல ஆண்டுகள் ஆகிய நிலையில்.. அன்று பழைய அனுபவங்களிலிருந்து மீண்டு எழுந்து கொஞ்சம் புதியதான வெள்ளை வேட்டிஇ சட்டையை மாற்றிஇ வெத்தலை டப்பா பேக்கையும் எடுத்து கொண்டார். நேற்று மாடசாமித்தேவர் வாங்கி கொடுத்த வெத்தலையே அதிகமாக இருந்ததால் வாசல்பக்க திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெத்தலையை சுவைத்து கொண்டு இருந்தார்.
      வண்டியில் ஏறி போகும் போது……
             ‘அந்த முக்கு கடையில நிப்பாட்டு ரெண்டு சூடம் வாங்க வேண்டும்’என்றார் வெள்ளச்சாமி. 
      ‘ஏன்? னு கேட்டான்’ஆறுமுகம்.
             ‘நேத்து ஒன்ட்ட சொன்னம்முல’
      ஆமாம்! வாங்கனுன்னு சொன்னீங்க ஏன்னு சொல்லலையே!’
            ‘ஒரு வீடு கெட்டுற எடம் வெத்து இடமா? மரம்செடி புல் புதருனு மண்டி கிடக்கும். அந்த எடத்துல என்ன இருந்திச்சோ! அல்லது அந்த இடம் வழியா அந்த தெருவுக்கு அல்ல அந்த ஊருக்கு அந்த ஊரக் காக்குற தெய்வம் அந்த நடைபாதை வழியா வந்திருக்கலாம். தேவதைங்க உலாவிய எடமா கூட இருக்கலாம். இது யாருக்கும் தெரியாது நாளடைவில் பட்டாபோட்டு வீடுகெட்ட ஆரம்பிச்சிருக்கலாம். அதனால ஊரக் காக்கிற தெய்வத்திடம் அனுமதி கேட்டு போகனும் வரனும். ஏன்? னா வைக்க போவது வனதேவதைகள் வாழ்ந்த மரத்தை நெலயா விட போறோம். எதையும் பார்த்து பவிறிச்சி தான் செய்யனும். சும்மா ஏனோ தானோனு எடுத்தமோ கவுத்தோமோனு செஞ்சிடக் கூடாது. ஒரு வீட்டுக்கு நிலவிடும் போது எந்தப் பிரச்சனையும் வராது. ஏன்…னா புதுவீடு கெடைக்குனு எல்லா தேவதைகளும் வீட்டுக்குள் வர ஆரம்பிச்சிடும்…
     திடீர்னு ஏதாவது சம்பவம் நடக்குதுனு வச்சிக்கோ அதற்கு காரணத்தைத் தேடினா ஒன்னுமே தெரியாது. அதற்கு காரணம் ரத்த ருசி கேட்கும்…. என்று மோட்டார் வண்டியின் பின்னால் இருந்துக் கொண்டு சொல்ல சொல்ல முன்னால் வண்டியை ஓட்டிய ஆறுமுகத்துக்குள் உள்பயம் ஏற்பட தான் செய்தது.
         ‘அண்ணாச்சி அவர் சொன்ன ஆவுடையானூர் வந்துட்டு இதுக்கப்புறம் எப்படி போகனும்’. எச்சி முழுங்கி கேட்டான் ஆறுமுகம்.
         ‘அந்தப் போகுது பார் அந்த ரோட்ட பார்த்து போ’னு சொல்லும் போது அது வலதுபக்கமாக ஒத்தைப்பாதையாக ஆள் அரவம் எதுவுமில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் ஒன்றிரண்டு வீடுகள்இ புட் புதர்கள்இ சில வேப்ப மரங்கள்இமண் சுவரினால் கெட்டப்பட்ட பீடம் கரைந்து உள்ளே உள்ள மண் வெளியே தெரிந்தது. பழைய விளக்கு தகரத்;திலானது. எண்ணெய் மக்கிய நிலையானாலும் திரிபோட்டு எரிச்சிருக்காங்கனு தெரிஞ்சது. ஏய்! நில்லுன்னு தோள்பட்டையைப் பிடித்து நிப்பாட்டினார்.
     வண்டியை பிரேக் போட்டு நிப்பாட்டும் போது ஒருசப்தம் தந்தது பாரு அது அந்த இடத்தில் கேட்கும் போது… பக்கத்து புதரிலிருந்தும் கருவேல மரத்திலிருந்தும் சிட்டுக்குருவிகள் பறந்து ஓடின.
      இறங்கி சூடம் கொளுத்தி வைத்து கும்பிட்டார் வெள்ளச்சாமி. வண்டியை விட்டு இறங்காதவனாக ஆறுமுகம் இருந்தான். எதைப்பற்றியும் கேட்டுக்காது சாமி கும்பிட்டப் படியே வண்டியில் வந்து ஏறினார் வெள்ளச்சாமி ஆசாரி. வண்டி கிளம்பியது. கொஞ்சம் தூரம் சென்று திரும்பி அதே வலதுபக்கம் திரும்ப சொல்ல கொஞ்ச காலி இடம். அதன் பக்கத்தில் பழைய பாணியில் தோண்டி வானம்போட்டு கருங்கல் சுவர் ஒருஆள் உயரத்திற்கு நின்றது அதற்கு மேல் சுவர்கள் அங்காங்கே உயர்ந்து நின்றது.
      கைக்கூப்பி வரவேற்பது போல வெள்ளச்சாமியே வந்தது மனதிருப்தியோடு சந்தோஷம் கொண்டார் மாடசாமித்தேவர்.
             ‘தெரு முக்குல இருக்கிற பேச்சிஅம்மனுக்கு சூடம் கொளுத்தி வந்தோம்!’.. அதான்… என இழுத்ததும்
             ‘நீங்க எதை செஞ்சாலும் ஒரு அர்த்தமிருக்கும்’ என்று பெருமையாக சொன்னபோது வெள்ளச்சாமி மனசும் பூரித்துப்போனது.
       நிலவிட போவதால் மாடசாமித்தேவர் கையாட்கள்இ கொத்தனார்இ கொத்தனார் கையாட்கள். மாடசாமித்தேவர் அவர் மனைவிஇ மகள் செல்வலெட்சுமி என எல்லோரும் சூழ நின்று கொண்டிருந்த ஒரு இலையை வடக்கு தெற்கு முகமாக விரித்துஇ வெத்தலை பாக்குஇ பழம்இ சூடம்இ பத்திஇ தேங்காய் என எல்லாவற்றையும் மாடசாமித்தேவர் மனைவி பேச்சிபிரம்மாச்சி தந்த பையிலிருந்து எடுத்து வைத்தார்.
            ‘தட்சணை வைக்கிங்களானு’ கேட்டபோது ஐந்நூறுரூபாய் நோட்டு வெளியே தெரியும் வெள்ளை கதர் சட்டையில் இருந்து ஐந்நூற்றி ஒன்னு என்ற முறையில் எடுத்து வைத்தார் வெள்ளச்சாமி மனசோ பூரித்துபோனது.
       சாணியில் பிடித்த பிள்ளையாரில் இரண்டு அருகம்புல் வைத்தார். சந்தனம் குங்குமம் வைத்தார் பூக்களை தூவினார். கதம்ப மாலையை எடுத்துக்கொண்டு நெல பக்கம் சென்று சந்தனம் குங்குமம் வைத்து பூ மாலை போட்டார். தேங்காய் உடைத்த தேங்காயிலிருந்து லேசா தேங்காயை நகத்தால் கீறி அருவாளுக்கு படைத்தார். பத்தி பொறுத்தி மூன்று முறை சுற்றினார். சூடம் கொளுத்த தீப்பெட்டி உரசும் போது நல்ல சகுனமாக மங்கல வாத்தியம் பக்கத்திலிருந்து கேட்டது. சந்தோசமாய் மூன்று முறை சுற்றினார் நிலைக்கும் சூடம் காட்டினார். நல்ல சகுணமாக இருக்கு நெலய தூக்கி வையுங்கள் என்றார். முதல் வாசல் கதவை வைக்கும் வரை மங்கள வாத்தியம் அந்தப் பக்கத்து தெருவைக் கடந்து போகும் வரை கேட்டது. விறுவிறு என்று கம்ப முட்டு கொடுத்து கெட்டினார்கள். சாந்து செங்கல் வைத்து கெட்டினார்கள் நில மத்தியில் இருக்கும் இரும்பு பட்டையை சுவரில் புதைத்து வைத்தார்கள் இப்படி ஒவ்வொன்னுக்கும் நிலயை வைத்து முடிக்கும் போது மணி 12.30 கடந்திருந்தது. 
       மூன்று வெத்தலைஇ ஐந்து பாக்குஇ ஒரு பழம்இ ஒரு அரை தேங்காய் ஆகியவற்றுடன் தச்சனையாக வைத்த ஐந்நூத்தி ஒன்னை எடுத்து கொண்டு கும்பிட்டார் வெள்ளச்சாமி ஆசாரி.
               ‘நல்ல சகுணம்இ இன்னைக்கு நிறைஞ்ச பௌர்ணமி வேற’ ….. என்றார் வெள்ளச்சாமி.
        ‘நீங்க வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு’ என்று ஆறுமுகத்தைக் கூப்பிட்டு இந்தாப்பா இருநூறு  ரூபாயை கையில் கொடுத்தார். கூட வந்திருக்களா சும்மா போக கூடாது.
        காச பார்த்தா உலகம் மறக்கும் ஆறுமுகம் இருநூறுரூபாயை வாங்கி சட்டை பைக்குள் வைத்துக் கொண்டான்.
        என்னடா ! பணத்தை தாராலமா தண்ணியா செலவு செய்பவர் மாடசாமித்தேவர் அல்ல. எதற்கு செய்யனுமோ அதற்கு மட்டும் தான் இப்படி செய்வார். மற்ற இடங்களில் மிக கறாரா இருப்பார். பக்கத்தில் நின்ற கணக்கு பிள்ளைக்கு தெரியும்.
       வீட்டுக்கு வரும்போது மீண்டும் சூடம் பொருத்தி பேச்சிஅம்மனை வழிபட, சூடத்தை வைத்து கெளுத்த முயற்சி செய்து தோற்றுபோகி கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஆறுமுகம் வண்டியை விட்டு இறங்கி வந்து தீப்பெட்டியை உரசினார் அப்போது அவன் கால் பெருவிரலில் லேசா இரத்தம் காய்ந்து இருந்ததை வெள்ளச்சாமி பார்;த்து நிலவிடும் போது வடக்கு ஓரத்தில் வைத்த ஒரு வேங்கை மரத்தில் லேசா இரத்தம் இருந்தது அது இவன் இரத்தமா என யோசிக்க. என்ன ரத்தன்னு கேட்க. ரத்தமா என்று அப்போது தான் அவனும் பார்த்து தடவி கொண்டான். சூடம் கொளுத்தி வைத்தான். எரிந்தது தொட்டு கும்பிட்டான். சூடப்புகை சுழன்ற காற்றில் மறைந்து போனது யாருக்கும் தெரியாமல் 


காடு  கரைந்து வீடானது 
மரம் குறுகி கதவானது 
அடையாளம் மட்டுமே மாறியது 
அகமம் எதுவும் மாறவில்லை.... 

4…
      வெள்ளங்கி சுப்பிரமணியன் கடையில் அன்று முழுவதும் மாணிக்கம் மணி இருவர் மட்டுமே வேலை செய்தனர். மறுநாள் ஆறுமுகம் தவிர மற்றவர்கள் வந்துவிட்டனா.; வழக்கம் போல் போன இடத்தின் அனுபவங்களை வெத்தலை மென்ற வாயோடு சொல்லிக் கொண்டே வேலைச் செய்தார் வெள்ளச்சாமி ஆசாரி. ஒரு வாரம் இப்படியும் அப்படியுமாக உருண்டு ஓடியது ஆறுமுகம் வரவில்லை என்பதால் வேறோரு கார்பெண்டர்களை கணேசன் முதலாளி வரச் சொல்லி இருந்தார். வந்தவர்கள் இருவரும் சிற்ப கலை அம்சங்களைக் கொண்டவர்கள் அல்ல.
     கணேசனிடம் நிறைய வேலை இருக்கு. மாணிக்கம் சுப்பையாஆசாரி ஆகிய இருவரையும் வைத்து வேலைகளை துரிதமாக செய்யமுடியாது. இந்த ஆறுமுகம் வேற எதுவும் சொல்லாமல் போனவன் வரவேயில்லை. புதுசா வந்தவர்கள் சரியாக சிற்ப செதுக்கல் செய்ய மாட்டார்கள். ஒரு மாதத்தில் மூன்று நான்கு கையாட்கள் மாறி போனது தான் மிச்சம்.
     கோவிலின் இரட்டை கதவு ஒன்று பெரிய ஆடர் வந்தது. கணேசன்… ஏ! மாணிக்கம் வேற யாராவது கதவுல சிற்பம் அடிக்கிறவங்க இருக்காங்களா…. என்ற கேள்வியை வைத்துவிட்டு ஆமாம்! நம்ம ஆறுமொகம் என்ன செய்றான்... என்றார்.
          ‘வேற ஆளுங்களுக்கு சொல்லி வச்சிருக்கேன் மாமா. நம்ம ஆறுமொகத்தை நேத்து பார்த்தேன். நாகர்கோவிலில் ஒரு வேலை வந்துச்சுனு அங்க போயிட்டு வந்தானாம். நாளைக்கு உங்கள பார்க்க வந்தாலும் வருவான்’ என்று சொல்லி முடிக்க வாசலில் வந்து நின்றான் ஆறுமுகம்.
           ‘ஏம்பாஇசொல்லி வச்சாப்புல ஒன்னப்பத்தி பேசும் போது வர! நாளைக்கு வாரியா! இன்னைக்கே வாரியா’ என்றார் கணேசன்
      சிரித்த முகத்தோடு உள்ளே வந்து தச்சு வேலை நடக்கும் பகுதிக்கு போனான்.
       கணேசன் கோயில் கதவு ஆடர் அப்பாடா வந்துட்டானு மனசுக்குள் சந்தோசத்துடன.; ‘ஏய்! மாணிக்கம் அந்தப் பெரிய கதவு ஒர்க்க பாத்து சொல்லிடு’ என்று கட்டளையிட்டார்.
       பெரிய கோயில் கதவுக்கு அடையாளமாக இரண்;டு முடிந்து மூன்றாவதாக கிருஷ்ணர் படம் செதுக்கப்பட்டிருந்தது.
      ‘என்னப்பா! மாடசாமித்தேவர் கட்டுற வீட்டுக்கு நெலவிட்டு வந்தப்புறம் அப்படியே போயிட்ட’ என்றார் வெள்ளச்சாமிஆசாரி.
      ‘ஒங்கலவிட்டுட்டு போகும் போது பழனியை எதுதாப்புல பார்த்தேன்! எனக்கு ஒருஆள் கை கொறையுது நல்ல சம்பளம் தாரேன்!  வர்றியா? என்றான். எடமும் சாப்பாடும் போக என்னூறு தொள்ளாயிரமுனும் கிடைக்கும் என்றான் .அதான் அவன் கூடவே போயிட்டேன்.
           ‘அங்கையே தங்கி வேலை செஞ்சா எழநூறு இல்ல தொள்ளாயிரம் கொடுத்தாலும் கட்டும். வேலை எப்போதுமிருக்கும், நிமிட்டி எடுத்திடுவானுங்க. இதுத்தெரியாம இவனும் போறான்’ என்று சடச்சி கொண்டு சொன்னான் மாணிக்கம்.
      ஏ! விடுப்பா இது வழக்கமா நடக்கிறது தானே எத்தனை முறை சொல்லியாச்சு. சுப்பையா முறையிட்டதும் வெள்ளச்சாமி ஆறுமுகம் பார்த்து வெளிய நா போயி நல்லா சம்பாதிச்சி வந்திருக்க.. அதனால டீ சொல்லலாமே என்று புகைப்போட்டார்.
     ‘இவன் எப்பம் வாங்கி தந்திருக்கான்! ஏய்! மணி போயி விசாக பவன்ல போயி இரண்டு பார்சல் காபி வாங்கி வா’! என்றான் மாணிக்கம்.
      ‘நா! னே! தாரேன்! இந்தாடா என்று ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து மணியிடம் கொடுத்தான் ஆறுமுகம். வந்த ஒடனே செலவ இழுத்து வச்சி விடுவிங்களே என்று புலம்பிக் கொண்டான்.
     ‘எல்லா படமும் வரைஞ்சி வச்சாச்சி இனி நீ பார்த்து செதுக்குறது தான் உன் வேலை’ என்றான் மாணிக்கம்.
     ஏ! மாப்ள ஒன்னைப்போல படம் போட இந்த உலகத்துல யாருமில்லடா! என்று பெருமை பொங்க அதைப் பார்த்து பூரித்து சொன்னான். மனம் இழகிய நிலையில் ஆறுமுகம்.
      உட்கார்ந்து வேலைச் செய்யவும் கதை பேசவும் ஆரம்பித்தனர். நாகர்கோவில் ரோடுஇ பெண்கள், பஜார்இ மீன்இ மீனாட்சிபுரம்இ வடசேரி பஸ்ஸ்டாண்டுஇ என நீண்டு கொண்டே போனது. தினமும் ‘நான் வேலைப்பார்க்கும் இடத்து வழியா ஒரு காலேஜ் இருக்கு பெண்கள் போவதும், ஒரு பெண் கம்பெனி கொடுத்ததும் பின்னர் பேசவே ஆரம்பிச்சிட்டோம்’ என விவரித்தான்.
      ‘வேல பார்க்க போன இடத்துல’….. வெள்;ளச்சாமி இழுத்தார். நானா பேசினேன் அந்த பெண்ணுதான் பேசினா? என்று தன்மேல் உள்ள நியாத்தை முன்வைத்தான் ஆறுமுகம்.
      விசாகபவன் காப்பி வந்ததுஇ விலை இங்கு கூடதான் என்றாலும் ருசி நாக்கின் மேல நந்தனமாகும். முக்கிய சமயங்களில் கிடைக்கும். இதைபோல மாசபொறப்பு அன்று வேலுப்பிள்ளை கடையிலிருந்து பாயாசம் வாங்கி பருகுவார்கள்.
      சிறுசிறு கோடு டிசைனும் வாட்டமா அடிக்கவும் ஆரம்பித்தான் மணி. படம் வரையும் முயற்சியில் தெளிவு இல்லாமல் இருந்தாலும் எப்படி படி எடுக்க வேண்டுமென்று தெரிந்து கொண்டிருந்தான்.
      வெள்ளச்சாமிஆசாரி தான் ஆறுமுகத்திடம்….ஏய்! அன்னைக்கு மாடசாமித்தேவர் கெட்டுற வீட்டிலிருந்து வரும்போது காலில் இரத்த காயமிருந்தது புண்ணாச்சா? அப்படியே ஆறி போச்சா?
           ‘எப்பம் பட்டுச்சி’ என்றான் ஆறுமுகம்.
     ‘இன்னைக்கு சாப்பிட்டதையே கேட்டாலே தெரியாது நீங்க நேத்து சாப்பிட்டத கேட்கீங்க’ என்று இடைமறித்து கூறினார் சுப்பையா.
           ‘நம்ம வேலையில படாத காயமா? வாரத்துக்கு ஒரு முற எப்படியாவது அடி படதான் செய்யும். இந்த பாருங்க போன வாரம் பட்டது என்று முட்டில் காய்ந்த ஒரு காயத்தை காட்டினான். எதுக்காக இப்படி அதையே நோண்டி நோண்டி கேட்குறீங்க’ என்றான் ஆறுமுகம்.
    ‘அதுக்கில்லப்பா…. யாருனாலும் நெல விடுவதற்கு போயிடலாம். ஆனால் தச்சுக் கழிக்கும்போது இப்படி ரத்த கீரல் பட்டு வந்திட கூடாது. எனக்குத் தெரிஞ்சி நூறு தச்சாரிங்கள்ல பத்து பதினைஞ்சிபேர் மட்டும் தான் போவாங்க. மத்தவங்க வேண்டானு சொல்லிடுவாங்க சாதாரணமா எதையும் கழிச்சிட்டு வர முடியாது.  நடுஜாமத்துல பூஜை செய்யும் போது பயப்படக் கூடாது.
    ‘என்ன அண்ணாச்சி சொல்றீங்க’ என்றான் மாணிக்கம்.
    ‘ஆமாம்பா! நாம வேலப்பாக்கிற ஒவ்வொரு மரமும் பல தேவதைகளுக்கும் பூதங்களுக்கும் விருப்பமான இடம். அதை அதிட்ட இருந்து வெட்டி எடுத்து வந்து விடுகிறோம். சில தேவதைகள் தங்கள் விருப்பமான மரம் போனதும் அதைத் தேடி வர ஆரம்பித்துவிடும். மரத்துக்குள்ளே போயி மரஞ்சிக்கிடும். அதுக்கப்புறம் அதைவிட்டு வெளியே வராது. அதை நாம் இடஞ்சல் செய்யும் போது, அதுக்கு கோபம் வந்து படாதபாடுபடுத்தும். நாம வேலை செய்யுற எடத்தில சில நேரம் ஒடம்பு வலி அதிகமாக இருக்கும், சிலநாள் ஒன்றுமே தெரியாது. ஏன் தெரியுமா? அதுக்கு இதுதான் காரணம் என்று அமுக்கி கூறும் போது யாருக்கும் வேலை ஓடவில்லை. 
     தாங்கள் ஏறி உட்கார்ந்து வேலை செய்யும் மரகம்புக்குள் பூதம் உட்கார்ந்திருக்கு என்று என்னும்போது எப்படினு யோசித்தார்.
     ‘அதுமட்டுமில்லடா! வீடுகளுக்கு மட்டுமல்ல கோயிலுக்குள்ளையும் பூதங்கள் வந்திருக்கு உதாரணத்துக்கு: நம்ம நெல்லையப்பர் கோயில் தெக்கு முக்குல இருக்குற சங்கிலி பூதத்தார் எப்படி வந்தார் தெரியுமா? 
    ‘எங்கண்ணாச்சி.. இருக்காரு’.. என்றான் மாணிக்கம்
     ‘நம்ம  டவுண் மார்கெட் இருக்குலா’..  வெள்ளச்சாமி வெத்தலை வெளியே துப்பி கொண்டு. 
     ‘ஆமாம்..  இருக்கு’ என்றான் ஆறுமுகம்
     வெள்ளச்சாமி ‘நம்ம நெல்லையப்பர் கோவில் வாசலிலிருந்து வர வழியா மார்கெட்டுக்குள் நுணைவோம்லா… அதான்  பிள்ளையார் தேரும் முருகன் தேரும் இருக்கு பாத்தியா’   
     ஒன்றும் புரியாமல் ஆறுமுகம் குழம்பும் போது.
     ‘அதாம்பா… மாடத்தெரு இருக்குலா…. அப்பமிருக்குற மாடத்தெரு இது இப்பமில்ல. வாயில் ஒரு வெத்தலை இல்லாமல் பேசினார் வெள்ளச்சாமி.
      ‘என்னணே சொல்றீங்க’ என்றான் மாணிக்கம் 
      ‘ஆமாப்பா. அப்ப இந்த தெரு ஒரு மாதிரியான தெரு. அதான் தாசிமார்கள் இருக்கிற தெரு. இன்னக்கி அப்படி இல்ல, அந்த தெரு பக்கம் போனா? நின்னா? யாரச்சும் பாத்திட்டாங்கனா? அதோடு போச்சி ஏய்! ஒம் பையன் மாடத்தெருவுல பாத்தேனு அவன் அப்பன்ட அல்லது ஊர்ல சொல்லிட்டா மானம் போயிடும். பையனுக்கு தகாத உறவுல பல பெண்கள் உண்டோனு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆறு மணிக்கு மேல! அந்த தெருல போனா வீட்டு வாசல்ல பல பெண்கள், மோகன சிரிப்பு, வசீகரப்பார்வை, பவுடர், அலங்காரம், சீவி முடிச்ச கூந்தலை முன்னாடி போட்டுகிட்டு, மல்லிகைப்பூ வாசம், ரெண்டு மூனு பேர் கூடி பேசுவது, தலையை வச்சி லேசா அழைக்கிறது, கொஞ்சம் வயசானதுனா நடையில ஒக்கந்துகிட்டு வெத்தலையை சவச்சி தூப்பிக்கிட்டு, கும்முனு நிப்பாள்க. இதைப் பாக்கிறதே’.. என்று மெய் உருக பழைய ஞாபக ஞானத்தில் சிலேகித்தார். பின்னரே சுதாரித்து. ‘அதுனா உங்களுக்கு எதுக்கு .. மேலரத வீதி வழியா மார்கெட் நுணையிர முக்குல, மேல பாத்தா எலுமிச்சை மாலை அவர் உயரத்துக்கும் பூமாலை காய்ந்தும் காயாமலும் இருப்பார். கோவில் சுவத்ல நாலுமுக்குலயும் பூதத்தார் இருப்பார் ஆனா! இந்த பூதத்தார்க்கு மட்டும் தான் முதல் மரியாதை இன்னைக்கும் செய்றாங்க  இவர் எப்படி வந்தார் தெரியுமா?. நாலு முக்லயும் நாலு காவல் தெய்வமிருந்தாலும் மத்த பூதத்த விட இந்த சங்கிலி பூதத்தாருக்கு சக்தி அதிகம். தேரு கிளம்பினா இவருக்கு பூமாலை சாத்தி, படையல் வச்சி வெடல போட்டு, அதக்கப்புறம் தான் தேரயே வடம்பிடிச்சி இழுப்பாங்க. இல்ல உயிர் காவு வாங்கிரும். இவர் மலையாளத்துல இருந்து குத்தாலம் வழியா வேலசெய்ய வந்த மரத்தோடு கோவிலுக்குள்ள வந்துட்டாரு. இவர் சக்தியால் எல்லாத்தையும் அட்டகாசம் செய்ய தெக்கு முக்க கொடுத்து நீ தான் காக்கனுனு பொறுப்பையும் கொடுத்தாங்க. இவர் எப்படி வந்தாருனு ஒரு கதையே சொல்வாங்க…   கோயிலுக்குள்ள கோபுற கட்டட வேல நடக்கும் போது மரம் நிரைய தேவப்பட்டுச்சு பல மரங்கள் இருந்தாலும் நல்ல வலுவான மரமொன்னு தேவப்பட்டுச்சு கரைகண்ட ஆசாரிய கூப்பிட்டு எத்தன மொற கட்டினாலும் கோபுறம் நிக்க மாட்டுக்குது நல்ல மரமொன்னு வேணும்னு கேட்டு அனுப்பி வச்சார்.  அந்த ஆசாரி ஒவ்வொரு காடா தேடி ஒரு மரத்தையும் வெட்டாம பாத்துகிட்டே போறான் கூட வந்தவங்களுக்கு எறுச்சல் “பல மரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்ட மாட்டான்” என்று பேச ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு காடா தேடி போனதுல கடசியில மேற்கு தொடர்ச்சி மலைக்கு போயி ஒருமரத்த கண்டுபிடிச்சான், இந்த மரம் கிளையில்ல, வடு இல்ல, பூக்கல, காய்கல வெட்டி எடுத்து கொண்டு வர ஒரு மாசமாச்சாம், கொண்டு வந்து வேல செய்யும் போது அங்கு வேல செய்றவங்களுக்கு ஒன்னுலாட்ட ஒன்னு ஆகுது. ராத்ரி அங்கு படுக்கிறவங்களுக்கு ஒரு பையன் கட்டைய வச்சி தூக்கி போட்டு ஆடுறாப்ல இருக்குமாம், காலையில வந்து பாத்தா கட்டைகள் ஒதுங்கி கிடக்கும். கோபுற வேலயும் முடியுற கட்டத்துக்கு வந்துட்டு, எல்லா வேலையும் முடிஞ்சி வீட்டுக்கு போகும் போது, அரசன்ட்;ட போயி இப்படி இருக்குனு சொன்னாங்க. அரசன் அந்த பழைய ஆசாரிய கூப்பிட்டு என்னனு கேட்டார், தச்சுக்கழிங்க  சரியா போயிரும் என்றார், நீயே கழிச்சிடுனு சொன்னதுக்கு ‘ஒரு வேண்டுகோளும் வைத்தார், தச்சிக் கழிக்கும் போது அந்த பூதம் கேட்கிறதை கொடுக்கனும் அது என்ன கேட்தோ, அது கேட்கிறத கொடுப்பிங்கனா நான் அந்த பூதத்த வெரட்டுதேன்னு’ சொன்னாராம். நடுஜாம பூஜைய வச்சி பூதத்த அழச்சாராம், வந்த பூதம் நான் நெடுநாள் வாழ்ந்த மரம், இந்த மரம் பூப்பதில்லை,காய்ப்பதில்லை, பறவைகள் வருவதில்லை, பூச்சிகள் அண்டுவதில்லை இதை வெட்டி கொண்டு வந்தால் நான் எப்படி வாழுவேன் என்றதாம். உனக்கு  என்ன வேண்டும் கேள் நாங்கள் செய்கிறோம், என்று கேட்டதற்கு ‘நான் இருக்க இடம்,  எனக்கு தான் முதல் மரியாதையும் தரவேண்டும், தந்தால் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்றது. தெக்கு முக்கில் இருந்துகோ, ஊர காவல் காத்து வழி நடத்து, உனக்கு தான் முதல் மரியாத என்று சொன்னாராம் அதில இருந்து தான் இந்த பூதத்தார் வந்தாரு,  அதனால் தான் சொல்றன் நாம வெட்ற மரத்ல தேவதைகள், பூதங்கள் வாழ்ந்திருப்பாங்க என்று வெள்ளச்சாமி நீண்ட பெரிய பிரசங்கத்தையே முடித்தார்.
      கேட்ட ஒருவரும் வேலை செய்யவில்லை மணி ஒரு பெரிய மரக்கட்டையை தடவிய படி இந்தப் பெரிய கட்டையில் பூதமிருக்குமா? என்று யோசித்தான்.


தேவதச்சன் திருசபையில்        
இழைப்புளி செய்த திருத்தம் 
மரங்கள் மன்னிக்கப்படுகிறது...


5…
       எப்போதுமுள்ள வேலையைப் போல் அன்றைய  பொழுதும் முடிந்து கொண்டிருந்தது. சாய்ங்காலம்  மணியானதால் நல்ல ஒரு டீயைக் குடித்து விட்டு ஒரு தம் போட்டு வந்த  சுப்பையாஆசாரி தன் தலையைச் சுற்றினார், நாக்கை மடித்து கடித்தாh,; ஏய்….. என்று பெரும்சத்தத்துடன் அருள் வந்ததைப் போல  ஆக்ரோசமாய் கத்தி சாமியாடினார். பதறியடிச்சி அப்படியே எல்லா சாமான்களையும் போட்டு விட்டு பக்கத்தில் நின்ற சுப்பையாஆசாரியைப் பிடிக்க ஆரம்பித்தனர்;. எல்லோரும் ஒரு நிமிடம்  பயந்தாலும் வெள்ளச்சாமி ஓடிப்போயி திருநீறு எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது கணேஷன் எல்லோரையும் விலக்கி பார்க்கும் போது… திருநீறு கொடுக்க எடுத்து பூசிக் கொண்டார்கள் வெள்ளச்சாமியும் கணேஷனும். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு கணேஷனைக் கூப்பிட்டு இந்த மரம் கோயிலுக்குப் போயி சேரனும், சங்கு சக்கரமிருக்கு ஒங்! கையாள ஒரு கோயிலுக்கு கொடு, ஒனக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும்.. செய்வீயா? என்று அருள் வந்து கேட்டார் சுப்பையாஆசாரி.
   ‘சரி அப்படியே செஞ்சிருவோம்’.. என்று கையெடுத்து கும்பிட்டதும்.. கணேஷனுக்கு திருநீறால் மீண்டும் கொடுக்க பூசியும் விட்டார் சுப்பையாஆசாரி. வெள்ளச்சாமி ‘சாமி மலையேறனும்,…. சாமி மலையேறனும்…..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.  
   கொஞ்சம் நேரத்திற்குள் பரபரப்பு, ஆக்ரோசம், அருள்பாலிப்பு, இரக்கம், கெஞ்சல்,கலக்கம், பணிவு என எல்லாம் அரங்கேற்றம் பெற்று முடிந்தது.
    மயங்கி எழுவதை போல சுய நினைவுக்கு வந்த சுப்பையாஆசாரி பழைய படி தன் இருக்கைக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார்.
    ‘எப்படி சாமி வருது? என்று கேட்டால், ‘எப்படினு தெரியலனுதான் சொல்லுவார் சுப்பையா ஆசாரி. இது மாணிக்கத்திற்குத் தெரிந்ததால் அவரிடம் கேட்டு கொள்ள மாட்டான்.  கொஞ்ச நேரத்திற்கு  வேலை மட்டுமே நடந்தது யாரும் யாருடனும் பேசிச்கொள்ளவில்லை         
      கணேஷன் வீட்டுக்குச் செல்லும் போது. பயபக்தியுடன் பக்கம் வந்து சுப்பையாவிடம் ‘வர செவ்வாய்க்கிழமை ஒரு வீட்டுக்கு தச்சுக் கழிக்க வேண்டும் போறீங்களா?’ என்றார். அந்த சாமியாட்ட நிலையிலிருந்து மீறாமல் 
      சரி என்பது தலையை ஆட்டினாரைத் தவிர பேசவில்லை.  ‘வீட்டுக்காரங்களை உங்கள பாக்க சொல்றேன்’ என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார்;.
      ‘அண்ணனுக்கு கொத்து அள்;ள போது’ என்று சீண்டினான் ஆறுமுகம்.
    திரும்பிப் பார்த்து ‘வேணுமுனா நீ போயிட்டு வா! என்று அசால்டா.. போகிட முடியுமோ என்ற தொனியில் பதில் உறைத்தார். சாதாரண விசயமில்லை தம்பி! தச்சுக் கழிக்கிறது உயிர பணயம் வைக்கிற மாதிரி! வந்தா உண்டு. இல்லை ஒன்ன கொண்டு போயிரும். ஜாக்கிரதையா செய்யனும், அதுவும் பயமில்லாம செய்யனும், இல்ல ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதா ஆகிவிடும்’ என்றார் சுப்பையாஆசாரி. 
      வெள்ளச்சாமி ‘ஆமாப்பா.. எல்லாரும்  தச்சுக் கழிக்க போக மாட்டாங்க. ஒரு உயிர் பலி கொடுக்க போறோம். அந்த வீட்டுக்குள் போனதும்.வீட்ல இருக்கிற தேவதைகள கூப்பிட மொதல படையல் போடனும் ரத்த பலி கொடுக்கனும்  குளிர வைக்கனும் உடனே வீட்ட விட்டு போங்க என்று சொல்ல முடியாது. கூட்டி போறாப்புல வெளியில விட்டுட்டு அவுங்க அவுங்க வீட்டுக்கு போயிடுவாங்க. நம்ம ஆசாரி மாறுங்கள்ள நூத்துல பத்து பேர் தான் இத செய்வாங்க, சுப்பையாஆசாரி சாமியாடியாய் இருப்பதால் தச்சுக்கழிக்கும் போது தேவதைகள் அடங்குது, மத்தப்படி தேவதைகளோ பூதங்களோ அடங்காது மேல சாடிரும்
      உற்று கேட்ட ஆறுமுகம் பெரியதாக எதையும் பொருட்படுத்தாமல் அசல்டாக இருக்க தான் செய்தான்
    மீண்டும் தொடர்ந்த வெள்ளச்சாமி ‘நம்ம கீழத்தெரு இசக்கி இருக்காமுலா, அவன் கே.டி.சி நகருல ஒரு வீட்ல தச்சிக்கழிக்க போயிருக்கான். இப்பமுலா வீடுங்க நெறைய இருக்கு! அப்பம் அது காடு தானே, ஒன்னு ரெண்டு வீடுங்க மட்டும் தான்; அங்கெங்க இருந்திச்சி, தச்சிக்கழிக்க போயாச்சி பூமாலை போட்டு, வெத்தல பாக்கு எல்லாம் வச்சி, சர்க்கரைப் பொங்கல் வச்சி சாப்பிட்டு, எச்சாக்கி வச்சிட்டு வரும் போது எலுமிச்சப் பழம் ஒன்னு, முட்டையும் ஒன்னு எடுத்து மடியில கெட்டி கிட்டாங்க நம்ம பாதுகாக்கிறது இது தான், இது தவறிச்சினா போச்சி, தச்சுக்கழிக்கிறது நடுஜாமத்துல நடக்கிறதால பயம் வந்திட கூடாது, மத்த முட்டைகளால் வீட்ட நல்லா சுத்தி வெளியே வந்து, அந்தத்  தெருக்கு வர பாதையில மூனு ரோடு சந்திக்கிற எடமா பாத்து முட்டைய வீசனும், தான் வர்ர பாதையை தவிர மற்ற மூனு பாதையிலும் முட்டைய வீசிட்டு வரனும்;, வீசும் போது நாய் ஊலையிடும், பயத்திரக்கூடாது, போனவன் பயந்துட்டான.;  படையல் வச்சி திரும்பி நின்னு முட்டைய வீசிருக்கான், வீசுன முட்டை இவன் முன்னாடி வந்து விழுது.. பதறிட்டான். திரும்பி கூட பாக்காம வரும் போது மடியில வச்ச முட்ட கீழ விழுந்து ஓடையாம ஓடுது, விறுவிறுனு பாக்காம வீடு வந்து சேர்தானாம், மறுநாள் இவன் எழுந்திருக்கவே இல்லை, ஒடம்பு அனலாய் கொதிக்குது, இரண்டு நாள் கழிச்சி.. பயந்திருப்பானு ஒரு சாமியாரை கூட்டு வந்து திருநீறு போட்ட பொறவு தான் சரியாச்சாம்.. என்றாhர்.
       மயிர் புல்லரித்து போனது ஆறுமுகத்திற்கு, பயந்தே போனான் மணி, மிரண்டு போனான் மாணிக்கம்.. ‘இதனால் தான் இந்த மாதிரி விசயங்களுக்கு நா! போறது இல்லை’.. என்றார் வெள்ளச்சாமி. 
     ‘தச்சுக்கழிக்க போறவங்க வனதேவதைகள சமாளிக்க முரட்டு ஒடம்பு இருக்கனும், சொத்த ஒடம்புனா சமாளிக்க முடியாது…  தடியங்கா வெட்டி வைப்பாங்க. இதுக்கு ரொம் தைரியம் வேணும், வீட்ட விட்டு வெளியே கொண்டு வந்து முச்சந்தியில வச்சி தண்ணி ஊத்தி கழுவி இதை செய்யும் போது சம்மணம் போட்டு உக்காந்து தான் செய்யனும், முட்டைய வீசக்கூடாது. கையில கொடுப்பத போல வீசனும்’ இப்படி சுப்பையா ஆசாரி பாதி விழுங்கியும் பாதி விழங்காமலும் சொன்னார். 
      “ஒரு தடியங்காய் வெட்டி குங்குமம் பூசி வைக்கிறது ஒரு வெள்ளாட்ட வெட்வதற்கு சமம்” பார்த்து செய்யனும,; கூட வரும் தேவதையைக் காட்டுக்கு அனுப்பனும,; வர வழி எல்லாம் திரும்பி பார்க்காமல் வரனும் 


தச்சன் செய்த
தாழ்ப்பாள் துவாரமே
நம்பிக்கை பாத்திரமாக
காலம் சொல்லி நிற்கிறது...
6…
       ‘காலம் போல வாழ்க்கையும் உருண்டு ஓடுது, பல பல ரியல் எஸ்டேட்களால் பல பல வீடுகள் உருவானது, தச்சுத் தொழில் இன்று நிறுவன அமைப்புக்குள் வந்து நிற்கிறது, அன்று வீடு கெட்டும் இடத்திற்கு வந்து, தென்னை மர தட்டி கீற்று போட்ட இடத்தில் பட்டறையைப் போட்டு, தனித்தனியாய் அறுத்து, நல்லா இழைத்து, விட்டம் பார்த்து, குறியீடு போட்டு, எந்தக் கதவு எந்த இடம், எந்தப் பாகம் எந்த இடம், குறித்து வரைந்து, வீட்டு வேலைகள் முடிக்கப்படும். பால் காய்ச்சுகின்ற அன்று கொத்தனார்களுக்கும் ஆசாரிகளுக்கும் வேட்டி சட்டை தட்சணையெல்லாம் தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பாங்க. இப்போது அப்படி ஒன்று இல்லாமல் தான் போகுது. எல்லாம் ரெடிமேடா மாறிப் போச்சி’ என்றார் வெள்ளச்சாமி.. 
      அப்படித் தான் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வேலையைப் படித்தார். இப்போது கதவு டிசைனை பார்க்கிறார்கள், ஆடர் கொடுக்கிறார்கள். கிராக்கியிடம் இந்தத் தேதி வாங்க என்றும் வண்டியில் வந்து ஏற்றிவிட்டு போறாங்க என்றும். இல்லை செஞ்சு வைத்ததைப் பார்த்து இது போதும் என்று வாங்கிவிட்டு போறாங்க… உலகம் ஓடுது, வாழ்க்கையும் ஓடுது, அதற்கு ஏற்ப தொழிலும் ஓடுது என்ற வெறுமை வரத்தான் செய்தது. 
     ‘மொத ஆசாரிங்களுக்கு நல்ல மரியாத இருந்தது, இப்பம் அப்படி எங்க இருக்கு .. ஒரு காலத்துல ஒரு மாதத்துல ஒரு தேரையும் செஞ்சாங்கனு சொல்லுவாங்க, ஒரு கோயில கெட்டி முடிக்க ரெண்டு மூனு பரம்பர ஆச்சுதுன்னு சொல்லுவாங்க, நாடோடியா ஒவ்வொரு ஊராய் இருந்து வேலை செஞ்சாங்க, அரசாங்கத்துக்கு காசு அடிச்சி கொடுத்து நெருக்கமா இருந்தாங்க, கம்மாள குடி கலையா பூனல் போட்டு குடுமி வச்சு கடுக்கன்போட்டு இருப்பாங்க என்று பழைய பெருமை எல்லாம் இன்னைக்கு மாறிப்போச்சி’ என்று அக்கசாலை விநாயகர் கோவில் கூட்ட முடிவில் ஒருசிலர்பழம் பெருமையை பேசிக் கொண்டார்கள்
      அமாவாசை கூட்டம் முடிச்சி தாமதமாய் வேலைக்கு வந்தார்கள். எல்லோரையும் ஒன்றும் சொல்ல முடியாது சுப்பையாபிள்ளையாலும், இது போன்ற கார்பெண்டர்ஸ் கடைகளை பணம் பலம் வைத்திருக்கும்  முஸ்லிம்களும், நாடார்களும் கம்மாளர்களும் நடத்துகின்றனர்.  ஐhதி சார்ந்த குழுக்களின் கட்டு திட்டங்களை யாரும் உள்ளே நுழைவதில்லை.
       கால ஓட்டத்தில் செல்கின்ற வாழ்க்கையானதால் இதற்கிடையே மாடசாமித்தேவர் கெட்டுகிற வீட்டிற்கு கதவுகள்,  ஜன்னல் கதவுகள், அலமாறி கதவுகள், மரப்பீரோல் என அடுக்கியப்படி தச்சு வேலை தொடர்ந்தது, கணேஷனுக்கு கணிசமான ஒரு பெரும் தொகை கைக்கு கிடைத்தது. அப்பப்பம் ஆட்கள் போயி வேலை செய்து வருவதும். வீடு பிரமாண்;டமாக அமைந்தது. வீட்டிற்கு  முன் இரண்டு பெரிய மரத்தூண் இதன் மேற்கூறை சிறு சிறு ஓடுகளால் பழைய பாணியில் அமைந்தது, பல லட்ச செலவில்  தன் மகளுக்காக பார்த்து பார்த்து செய்கிறார் மாடசாமித்தேவர். 
     வீடு கெட்டி முடிக்கிற தருவாயில் வீட்டின் முன் பக்கம் பேரப்பிள்ளைகளுக்காக லவ்பேட்ஸ் வளர்க்க பெரிய கூண்டு வைக்க வேண்டுமென்று கணேஷிடம்  மாடசாமித்தேவர் சொல்ல, ஆறுமுகம் தானே முன்வந்து நான் நல்ல படியா செஞ்சி தாரேன் என்றான் 
     ‘அப்படி சின்;ன சின்ன வேலை இருக்கும், அதையும் பாத்திடு  ரெண்டு நாள் வேலையாக இருக்கும்’.. என்றதும். சரிங்கய்யா என்று தலையை ஆட்டினான் ஆறுமுகம்.
      ஆறுமுகம் மாடசாமித்தேவர் கெட்டிய வீட்டிற்கு வந்த போது இவ்வளவு அழகா இருக்கே மாணிக்கம் செஞ்ச மரவேலைப்பாடுகளில் உருவான அன்னத்திலான கதவு வரவேற்றது ..
    ‘வாப்பா… வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டு, முன்னால் கிடக்கிற பத்தடியும் நம்ம எடம் தான். இதுல நெட்டுக்கு பூஞ்செடிகள் வைக்கனும், சுத்தி காம்பொண்டு சுவர் வந்திரும்  இந்தப் பெரிய தூண் பக்கத்ல பெரிய கூண்டுல லவ்பேட்ஸ் வைக்கனும்’ என்றார் மாடசாமித்தேவர். 
      கற்பனையோடு நினைத்து பார்த்து கொண்டான் ஆறுமுகம் அய்யா! உங்களுக்கு எந்த சைஸ்ல வேணும்.. என்றான்.
     ‘வீட்டுக்குள்ள வரும் போது வலதுபக்கம் வச்சிங்கனா கூடு ஒதுங்கி போகும், வெளியே போச்சினா மழையில் கூடு நனையும். இத இடதுபக்கமா போட்டிடுவோம் என்ன கொஞ்சம் வீட்டு வாசல மறைக்கும் அவ்வளவு தான்’ என்றான் ஆறுமுகம்.
     ‘எப்படியோ நல்லா செஞ்சா சரிதான்’ என்று விடைபெற்று போகும் போது ஆட்களை கூப்பிட்டு ஆறுமுகத்தைப் பார்த்து ‘என்ன வேணுமோ எழுதி கொடுத்து விடு வாங்கிட்டு வந்திருவாங்க’ என்று கூறி போனார் மாடசாமித்தேவர்
      சிறுசிறு வேலைகளுடன் லவ்பேட்ஸ் கூடும் முடிய மூன்று நாட்கள் ஆனது. 
      கல்யாணம் முடித்து கொடுத்த தன் மகள் செல்வலெட்சுமி தன் கணவன், பிள்ளைகளுடன் காரில் வந்து இறங்கவும். பொங்கிய பாசத்துடன் தன் பேரப்பிள்ளைகளைத் தூக்கிய படி வீட்டைச் சுற்றிக் காட்ட சென்றார். ‘இதில் வருசையா பூஞ்செடி வரும், இந்தா ஒங்களுக்காக லவ்பேட்ஸ் கூடு, இந்தப் பெரிய ஹாலில்தான் படிக்கனும், சாப்பிட மேசை எப்படி இருக்கு, உக்கார சேர், ஒங்கம்மாவுக்கு சமையலறை, மேல சாமான்கள் வைக்க, இது பூசையறை இந்த நெல மட்டும் வேம்புல போட்டிருக்கு மத்தது எல்லாம் தேக்கு, வேங்கை தான்’ என்று பேர பிள்ளைகளுக்கு சொல்லுகிறதாக தன் மகளுக்கும் மருமகனுக்கும் சொல்லுவதைப் போல சொல்லிக்கொண்டே வந்தார். 
       வேலையை முடித்து  போகும்  ஆறுமுகம் ‘அய்யா எல்லாம் பார்த்து பவிறிச்சி  செஞ்சாச்சி இனி நீங்க தச்சிக்கழிக்க வேண்டியது தான் பாக்கி’ எனப் பீடிகைப் போட்டான். 
      ‘கூலியை கணக்கு பிள்ளேட்ட வாங்கிட்டு போ’. என்ற தோரணை மாடசாமித்தேவருக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல இருந்தது.
       பக்கத்தில் நின்ற மாடசாமித்தேவர் மருமகன் பெரிய பழக்கடை மண்டி வைத்திருக்கிறார். ஆறுமுகம் ‘அய்யா! நல்ல படியா வீடு முடிஞ்சிறுச்சி திஷ்டி விழுந்திரக் கூடாதுனு வந்த அன்னைக்கே தடியங்காய்ல படம் வரைஞ்சி வச்சேன்.. எல்லாம் முடிஞ்சி போச்சி நானே வந்து தச்சும் கழிச்சி தந்திருதேன், புள்ள குட்டியோடு வந்து குடியேறினா போதும்’ என்று பீடிகையுடன் தூபமும் விழுந்தது மாடசாமித்தேவர் மருமகனிடம் 
       வீட்டைப் பார்த்து சொக்கி நின்ற நிலையில் மாடசாமித்தேவர் மருமகன்.. ‘சரிப்பா.. நீயே வந்து நல்ல படியா அதையும் செஞ்சிட்டு போயிரு’ என்றதும் … மாடசாமித்தேவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை அப்படியே நின்றார். மருமகனுக்கு கொடுக்கும் மரியாதையாக ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. இவ்வளவையும் தானே முன்ன நின்று செய்தவருக்கு இது செய்ய ஒன்றும் பெரியதாகப்படாது. அதை யாரை வச்சி செய்யனும், எப்படி செய்யனும் என்ற பலமான யோசனையெல்லாம் நொடி போல களைந்தது.
       


ஆதிமரம் தேடிய தச்சன் 
இன்னும் இழைக்கிறான் 
அந்த தாய்மரம் கண்டுபிடித்தால் 
தன்தேவசபைக்குப் போகலாமென்று..
7…
      ஆறுமுகம் மாடசாமித்தேவர் வீட்டிற்கு தச்சிக்கழிக்க போனது. பற்றி எதுவுமே தெரியாது கணேஷனுக்கும் கடையில் உள்ளவர்களுக்கும் வெள்ளிக்கிழமையில் தச்சுக்கழிச்சிடலாம் என்று வீட்டைவிட்டு பதினொறு மணிக்கு புதிதாக வாங்கிய சேவலை ஒரு பெரிய சாக்கு பையில் வைத்தான் தேங்காய், பழம், பத்தி, சூடன், வெத்தலை, பாக்கு, முட்டை ஐந்தும், எலுமிச்சை ஒன்றும்,  சர்க்கரைப் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, அச்சுவெல்லம், கொஞ்சம் ஓலை, பழைய காப்பி சட்டி ஒன்று, கூட தீப்பெட்டி என எல்லாம் எடுத்து கொண்டான். நடுஜாமத்தில் எதுவும் எங்கையும் கிடைக்காது என்பதால். தனியா போனால் பயமாக இருக்கும் என்பதால் அதே தெருவை சேர்ந்த மற்றொரு ஆசாரி பையனான சுந்தர் என்பவனை இருநூறு ரூபாய் தாரேன் என்று பேசி கூட்டிக் கொண்டு போனான். இரண்டு பேரும் பகலில் வந்தாலே பாதை தெரியாது, ராத்திரி வந்தால் எப்படி தெரியும் ஆங்காங்கே ஒரு சில லைட் மட்டும் எரியுது … பல முறை இந்த வீட்டிற்கு வந்தாலும் ராத்திரி வரும் போது கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது.
      ஆறுமுகத்தின் டி.வி.எஸ் ஃபிப்டி வண்டி சத்தம் மட்டும் கேட்டது. அந்தத் தெரு தூரத்தில் எதுவோ வெளிச்சம் போல போனது. பின்னாடி இருந்து வந்த சுந்தர் பயந்து கேட்க ஆரம்பித்தான்..   ‘அப்படினா ஒன்னுமில்லடா’ என்று ‘நான் தானே வண்டிய ஓட்டுறேன் அப்பம் எனக்கு தானே தெரியனும்’ என்று அமர்த்திவிட்டான்.
      வீட்டு வாசல் பக்கம் வரும் போது சொல்லி வைத்தது போல வீடு திறந்து  இருந்தது. போன உடனே வீட்டு மத்தியில் விளக்கை எடுத்து வைத்து, பூ போட்டு பூஜைக்குத் தேவையான சாமன்களை எடுத்து வைத்து. சந்தனத்தை குழைத்து, குங்குமத்தை எடுத்து ஒரு வெத்தலையில் வைத்து, சின்ன செங்கல் மூன்று எடுத்து வைத்து கொண்டு, வந்த பழைய காப்பி சட்டியைப் பொங்கல் விட ஆரம்பித்தனர். அரிசி வெந்த பின் சர்க்கரைப் போட்டு இறக்கி வைக்க, பையிலிருந்த எலுமிச்சைப் பழத்தையும் முட்டையும் எடுத்து வைத்தனர். பின்னர் ஆறுமுகம் சந்தனம் எடுத்து கொள்ள, சுந்தர் குங்குமம் எடுத்து கொள்ள, ஒவ்வொருவரும் ஒன்றன் பின் ஒன்றாக வைத்தார்கள். எல்லா ஜன்னல், கதவுகள், இரும்பு கம்பிகள் என்று ஒன்றுவிடாமல் பொட்டுவைத்தார்கள், கொண்டு போன சேவலை வெளியே எடுத்து அதன் காலை வெட்டி வெத்தலை கிழியாமல் லேசா சுருட்டி அழகா பொட்டலம் போல அந்த இரத்தத்தைப் பிடித்து கொள்ளும் போது தான் ஆறுமுகம் சொன்னான் ‘வெத்தலையைக் கீழே வச்சிறாத’ சுந்தர் தலையை ஆட்டினானே தவிர பேசவில்லை. சேவல் கத்தாமல் இருக்க வெட்டுபட்ட இடத்தில் துணியை வைத்து கெட்டினான் ஆறுமுகம் 
      சேவல் இரத்தத்தைக் கொண்டு போயி இருக்கிற எல்லா கதவு, ஜன்னல், கம்பி என எல்லாயிடங்களிலும் ரத்தத்தால் பொட்டு வைத்து விட்டு, பூஜை செய்த இடத்திற்கு வந்து பார்த்தால்…. நான்கு முட்டை தான் இருக்கு ஒரு முட்டையை காணவில்லை.
      ‘அஞ்சுமுட்டை இருந்ததுலா நாலு தான் இருக்கு ஒன்ன எங்கெ’ என்றான் ஆறுமுகம். 
      அஞ்சையும் இங்கெ தான் வச்சேன்’ என்று அங்க இங்க திரும்பி பார்த்தான் சுந்தர். 
      அப்பொழுது இடது கோடியில் ஒரு முட்டை இருந்ததைப் பார்த்து, ‘இது எப்படி அங்கு போச்சி’ என்று சொல்லிக்கொண்டு சுந்தர் போயி எடுக்கும் போது டைட்டா இருந்திருக்கு டப்புனு எடுத்ததும் வந்துவிட்டது.
      எடுக்கும் போது டைட்டா இருந்ததை சுந்தர்  சொல்லிக் கொள்ளவில்லை
      நடுஜாமத்தில் எல்லா வேலையும் முடிந்தது என்று நினைத்த போது எலுமிச்சைப் பழத்தையும் ஒருமுட்டையும் எடுத்து மடியில் கெட்டி கொண்டான். மற்ற நாலு முட்டையில் ஒரு முட்டையை சுந்தரிடம் கொடுத்தான். அந்த முட்டைதான் இடதுகோடியில் போனது, மற்ற மூன்றையும் கையில் வைத்து கொண்டு வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டு மூன்று முறை சுற்றினான், அதை போல தடியங்காவையும் சுற்றினான் ஆறுமுகம். 
     ஆறுமுகம் வண்டியை சுந்தரை எடுக்க சொல்லி முன்னால் போக சொல்ல. பின்னால் வந்த ஆறுமுகம் கொஞ்ச தூரம் கடந்து முச்சந்திக்கு வந்த பின். சுந்தரை தள்ளி நிற்க சொல்லி வண்டியை நிப்பாட்டி இறங்கி வா என்றான்.  நிற்கும் போது தண்ணீர் பட்டிலை வண்டியிலிருந்து எடுத்து கொண்டான் சட்டை பையிலிருந்த முட்டையை கையில் எடுத்து இடது கையில் இடுப்பு பக்கம் வைத்து பிடித்து கொண்டான்.  
      முச்சந்தியைப் பார்த்தால் ஆள் நடமாட்டம் இல்லை, இருள் மட்டும் துணையாக இருந்தது, பெரிய அமைதியாக இருப்பதால் காற்று வீசும் சத்தம் கூட பெரியதாக கேட்டது. 
       ‘தண்ணீர் பாட்டிலை தா’ என்று கேட்டு தரையை தண்ணீர் தொளித்து கழுவி சுத்தம் செய்து, கொஞ்சம் அரிசியைக் கொட்டி நிரப்பி, பழம்,பத்தி வைத்து, தடியங்காவை வெட்டி குங்குமம் தடவி வைத்து, மூன்று முட்டையை கையில் எடுத்து கொண்டு எழுந்த போது நாய் ஊலையிட்டது, எழுந்து பின்னே இரண்டு அடி போயி முட்டையை எறிய வேண்டும், வருகிற திசையைத் தவிர மற்ற திசைகளில் முட்டையை எறியனும், எறியும் போது பயந்திட கூடாது என்று சொன்னதால் என்னவோ உள்ளுற பயம் ஊற ஆரம்பித்தது. வண்டி பையில் இருந்த சேவல் கத்த ஆரம்பித்தது, நாயின் ஊலை காதை அதிர செய்தது, பயம் அதிகமானதால் திரும்பி செய்வோம் என்று, முதல் முட்டையை பின்னால் வீசினான், அந்த முட்டை அவர்கள் முன்னால் வந்து விழுந்தது  பதறிவிட்டார்கள். சேவல் கடைசியாக உயிர் போவதைப் போல கத்த ஆரம்பித்தது, சுந்தர் கையில் இருந்த முட்டை விழுந்து உடையாமல் உருண்டு ஓடியது. 
      சுந்தர் ‘எண்ணே இங்கெ பாருங்க’ என்றதும்
       நீ வண்டியை ஓட்டு என்று வண்டி பின்னால் ஏறிக்கொண்டான் ஆறுமுகம்.
       தங்கள் வீடு இருக்கும் தெரு பக்கம் வந்த போது தான் நிம்மதி வந்தது, வழக்கமாக முட்டைகள் வீசு இடம் வந்ததும் முட்டையையும் எலுமிச்சைப் பழத்தையும் வீசி விட்டு, கோயில் பின் பக்கம் வழியா போக, ஏற்கனவே தயாராக வைத்திருந்த தண்ணீரால் குளித்து விட்டு  வீட்டுக்குள் போனார்கள் அவர்அவர் வீட்டுக்குள். இரவில் தூங்கினார்களா என்பது தெரியாது ஆனால் காலையில் சுந்தருக்கு வாந்தியும் பேதியும் எடுத்துவிட்டது, ஆறுமுகத்திற்கு பேதியோடு காய்ச்சலும்; வந்து ஆட்டி எடுத்தது. ஆஸ்பத்ரிக்கு கூட்டி போனார்கள் காய்ச்சல் குறைந்த பாடில்லை, மூன்று நாள் இப்படியே இருந்தது. இதற்கிடையே சுந்தரின் அப்பா விவரம் தெரிந்ததும் ஊருக்குள்ள சாமியாடுகிற மாரிகண்ணுவிடம் போயி திருநீறு போட்டு நேந்து கிட்டாங்களாம், பயந்து பயந்து இருந்து நான்காம் நாள் ஆறுமுகம் இறந்த செய்தி தான் வெள்ளங்கி சுப்ரமணியன் கடைக்கு தெரிந்தது மாணிக்கம், சுப்பையா ஆசாரி, வெள்ளச்சாமி ஆசாரி, கணேஷன் என எல்லோரும் துஷ்டி கேட்பதாக வந்தார்கள்
       ஆறுமுகத்தின் இறப்பு பற்றி சுற்றத்தார். எப்படி? என்னாச்சி? என்பதாக எல்லோர் கேள்வியும் இருந்தது, ‘மர்மம் களைவதைப் போல, மாடசாமித்தேவர் வீட்டிற்கு தச்சுக் கழிக்க போனாங்க’ என்பது போல லேசான தகவல் வெளிப்பட்டு நின்றது, கூட யார் போனார் என்று விசாரணையில் சுந்தர் பெயர் வந்தது. சுந்தரைத் தேடி மாணிக்கம் சுப்பையாஆசாரி போயி என்ன நடந்தது என்று கேட்டு கொண்டிருக்கும் போது கணேஷனும் வந்து சேர்ந்து நின்று கொண்டார்
      ‘எண்ணே! அது சரியான பூதம்ணே. எனக்கு ரெண்டு நாள் வாந்தியும் பேதியும் எடுத்திச்சி மன்னிப்பு கேட்டுட்டேன், அடி விழுந்தா எவ்வளவு வலி  வலிக்குமோ அவ்வளவு வலி வலிச்சது’ என்றான் 
     ‘நாங்க என்ன கேட்கிறோம் நீ  என்ன பதில் சொல்ற’ என்று மாணிக்கம் கேட்ட பின்னர் சுந்தர் ‘எண்ணே! நாங்க மாடசாமித்தேவர் வீட்டுக்கு தச்சுக் கழிக்க போனது, அங்கே இப்படி இப்படி நடந்தது, முட்டை காணாமல் போனது, தடியங்காய் வெட்டி வச்சது, என் கையில் உள்ள முட்டை விழுந்து உடையாமல் உருண்டது’ என எல்லாவற்றையும் சொன்னான். 
      சுதியில்லாத பேச்சு மட்டுமே அந்த இடத்தில் இருந்தது.
      அன்றைய நாள் சோக முடிவாகவே போனது, கருப்பந்துறை வரை சென்று இறந்த ஆறுமுகத்தை எரிய வைச்சி திரும்பும் போது, அந்த பிணத்திலிருந்து ஏதோ எழுந்து போகிறதாக சுப்பையாஆசாரி பார்த்து திகைத்து திரும்பினார், கருப்பந்துறைக்கு வந்து போகும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.

ஒரு ஜாதி மரம் வளர்கிறதென்றால்
அது தச்சனுக்காக தான்
தச்சனாக பிறந்திருக்கிறான் என்றால்
அவன் மரத்திற்காக தான்


8….
      மறுநாள் வெள்ளங்கி சுப்ரமணிய கடையில் ஆறுமுகம் புராணம் தான் ஓடியது ‘சொன்னாலே கேட்க மாட்டான்’ என்றார் வெள்ளச்சாமி ஆசாரி
      ‘ஏ! போங்கப்பா.. நேத்து அவன் ஒடம்பு எரியும் போது ஒரு வெண்புகை உருவம்போல ஏதோ! ஒன்னு எழுந்து போனதை பாத்தேன்’ என்று உடம்பு கூச்சரித்த காட்சியோடு சொன்னார் சுப்பையாஆசாரி.
      ‘என்ன மாப்ள சொல்ற’.. என்றார் வெள்ளச்சாமி 
      ‘இன்னும் முடியல கதை.. வேற என்ன என்னன்னவோ காத்திருக்கோ தெரியல’ என்று சொல்லி சுப்பையாஆசாரி முடிக்க
       டெலிபோன் ஒலிக்க எடுத்து பேசிக்கொண்டிருந்த கணேஷன் அதிர்ந்து போயி இதோ! வரேன்’ என்று சுப்பையாஆசாரியிடம் அண்ணே வாங்க மாடசாமித்தேவர் கெட்டிய வீட்டுக்கு முன்னால வச்ச தூண்ல ஒன்னு விழுந்திட்டதாம் …. நம்மட்ட தூண் ஒன்னும் வாங்கிட்டு போகலயே, என்ன தூண் விழுந்தது எப்படி விழுந்தது, வாங்கணே ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோம்’ என்றார்.  
       இன்று வெள்ளிக்கிழமையானதால் காவி வேட்டி கெட்டிக் கொண்டிருந்த சுப்பையாஆசாரி ‘ஒரு நிமிடம்’ என்று தான் வேலை செய்யும் இடத்தின் பக்கத்தில்  சுடலை மாடசாமி போட்ட வைத்து வணங்குவார். அங்கே சென்று கும்பிட்டு அதில் வைத்திருந்த எலுமிச்சைப் பழத்தை எடுத்து கொண்டு வெளியே வந்தார்
        மாடசாமித்தேவர் வீட்டிற்கு முன்னால் போய் வண்டி நின்றதும் இறங்கியவர்களுக்கு வீட்டு வாசலில் பூ சிந்தி கிடந்தது, ரத்தம் சிந்தி கிடந்தது வாசலைத் தாண்டி உள்ளே போனார்கள். பத்தடி தூரத்தில் வீட்டின் முன்பு வைத்திருந்த தூண் முறிந்து கீழே விழாமல் நின்றது. அதன் மேல் கூறை விழும் அபாயமிருந்தது. உள்ளே இருந்த வேலையாட்களிடம் மாடசாமித்தேவர் எங்கே என்பது போல கேட்டார்கள் 
       பதற்றத்தோடு வேலைக்காரர்கள் பதில் சொன்னார்கள், ‘இப்பம் தான் ஓடி வெளையாடிக்  கொண்டிருந்த பையன் கீழே விழுந்து நெத்தி ஒரத்தில் அடிப்பட்டு இரத்தம் கொட்டோ கொட்டுனு கொட்டிட்டு… ஆஸ்பத்ரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க’   
       வீட்டுவாசலில் ரத்தம் சிந்தி கிடப்பதற்கு காரணம் யூகித்து கொண்டனர், ஆனால் விழுந்த இடத்திலிருந்து இந்தப் பத்தடி இடத்தில் எந்த இடத்திலும் ரத்தமே இல்லை.
       ‘எங்கே விழுந்தான்’; என்று சுப்பையாஆசாரி கேட்க.. ‘வாசலை விட்டு ஓடி வரும் போது, இந்த லவ்பேட்ஸ் கூட்ல முட்டி நெத்தி ஓரத்துல அடி பட்டுருச்சி, இங்கே உட்காருங்க வந்திருவாங்க’ என்றான் வேலைக்காரன்.
       உட்கார மனமில்லை இருவரும் நின்ற படியே ஒருவர் ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
       ஆஸ்பத்திரிக்குப்  போயிட்டு வந்த மாடசாமித்தேவர் சோக முகமாக காரை விட்டு இறங்கிவந்து ‘இந்தா பாருங்க நல்லாயிருந்த  தூண் ஏன்? ஒடையுது, வர வர நாலஞ்சி நாளா ஒன்னுலாட்ட ஒன்னு ஆயிட்டே இருக்கு, இங்கே பாருங்க நல்லா ஓடியாடிய பேரக்கொழந்த ரத்தம்’ என்றார்
       ரத்தக்கரை கழுவிய கைகளை காட்டினார்.
      ‘அய்யா! ஒங்க வீட்டுக்கு போயி பேசுவோமா?’ என்று இடைமறித்து பேசினார் சுப்பையாஆசாரி. 
       ‘ஏம்பா’.. என்று மாடசாமித்தேவர் கேட்கும் போது ‘வீட்டுக்கு போங்க சொல்றேன் என்று சொல்லி முடித்தார்’.. சுப்பையாஆசாரி.
       அப்போது சுப்பையாஆசாரி முகம் இருகின தன்மையுடனும் சிவந்த கண்களுடனும் இரண்டு கைகளை ஒன்றாக இணைத்து இருகிப் பிடித்த படி, உடல் புல்லறித்த உணர்வுடன் காணப்பட்டார். எதுவும் பேசாமல் நின்ற கணேஷன் துடிப்பு குறைந்த இதயத்தோடு நின்றார்.   
       மாடசாமித்தேவர் தன் வேலையாட்களிடம் ‘இந்த ரெண்டு தூணையும் மேல்கூறையும் எடுத்திடுங்க’ என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது. ‘வேண்டாம் என்பது போல’ சுப்பையாஆசாரி தலையை ஆட்டி செய்கை செய்தார்.
       ‘அப்படியே வச்சிட்டு எல்லோரும் போங்க’ என்று சுப்பையாஆசாரி மெதுவாக சொல்ல மாடசாமித்தேவருக்கு உள்ளார பயம் வர தான் செய்தது
        மாடசாமித்தேவர் வீட்டிற்கு வந்து சேர்ந்த அனைவரையும் வீட்டுக்குள் உட்காரச் சொன்னார். போயி எதாவது கொண்டு வா! என்று வீட்டுக்காரியிடம் சொல்ல, வாயல்சேலை கெட்டிய வயது முதிர்ந்தது போல தெரியாத நரை கெஞ்சமும் நகை நிரையவும் முறுக்கு செயின், மூன்று வடம் முடிச்சி வடம், கோபி செயின், சிறிய கற்கள் வைத்து முக்குத்தி, நல்ல பெரிய கம்மல் என தேற்றம் தெரிய பேச்சிபிரம்மாச்சி அடுப்படி நோக்கி நடக்க ஆரம்பித்தால்.
        ‘இல்லங்க ஒன்னும் வேண்டாம் …என்று கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்த வண்ணம் நின்ற சுப்பையாஆசாரி உட்கார.
              ‘ஏன்? இப்படி நடக்கு, நாலு அஞ்சு நாளா நல்லா இருக்கிற பொருட்கள் ஒடையுது. தச்சுக் கழிச்ச பிறகு தான் இப்படி இருக்கு, முந்தாநாத்துனா பின்னால் நின்ற சுவர் கீழே விழுந்திருச்சி, இன்னைக்கு பாருங்க  நல்லா இருந்த தூண் கீறி நிக்குது, பேரனுக்கு அடிப்பட்டு ஆஸ்பத்ரிக்கு போயிட்டு வாரேன்’ என்று அடிக்கிக் கொண்டே போனார் மாடசாமித்தேவர்.
        டீயைக்  கொண்டு வந்து வைக்கும் போது அஞ்சாறு தங்க வளையல்கள் மின்னியது. கூட மகள், மருமகன் வந்து நின்றனர்
        சுப்பையாஆசாரியிடம் வலது கையில் மாட்டிக் கிட்ட எலுமிச்சைப் பழம் ஈரத்துடன் இருந்தது.
        ‘சாப்பிடுங்க’ என்றதும். ‘இல்லை எனக்கு ஒன்னும் வேண்டாம்’ என்றார் சுப்பையாஆசாரி.
         கணேஷன் மட்டும் டீயைக் குடித்து விட்டு, ‘அந்த தூண் எப்பம் வாங்கினீங்க’ என்றார்.
          ஓ! அதுவா தென்காசிக்கு பணம் வசூலிக்க போன எடத்தில் கடைக்காரன்ட ரெண்டு மரம் நல்லா இருந்திச்சி, கேட்டா ஏதோ ஒரு ஜாதிப் பெயர சொன்னான் இப்பம் மறந்து போச்சி… இது கேரளாவிலிருந்து வந்ததுனு சொன்னான். வீடு கெட்டி முடிச்சாச்சினு  செல்லுல படத்தை காட்டினேன். வீட்டுக்கு முன்னால இந்த ரெண்டு தூணை வச்சி ஒரு சாய்ப்பு போடுங்க நல்லா இருக்கும். நல்ல ஜாதி மரம் போனா கிடைக்காதுனு சொன்னதனால வாங்கிட்டு வந்து வச்சிட்டேன். வீடு பால்காய்ச்ச ஒரு நல்ல நாளை குறிக்கலாம்னு இருக்கேன் என்றார் மாடசாமித்தேவர்.
         ‘ஒன்னும் செய்யாதீங்க… வீடு பால் காய்ச்சிறதை தள்ளிப் போடுங்க’ என்றார் சுப்பையாஆசாரி
        ‘என்னய்யா சொல்ற’ பதட்டத்தோடு கேட்டார் மாடசாமித்தேவர்.
        ‘சொல்லுறத சொல்லிபுட்டேன் .. எதுவுமே செய்யாதீங்க தள்ளி போடுங்க… நீங்க கெட்ன வீட்டிற்கு தச்சுக் கழிக்கல’ என்றார் சுப்பையாஆசாரி.
       ‘ஒங்களோட ஆள் தானே தச்சுக் கழிச்சான்
       ‘அவன் செத்து, நேத்து பால் ஊத்தியாச்சி’ என்று கணேஷன் கூற. கூடியிருந்தவர்களுக்கு பயம் தொற்றிக் கொண்டது. என்ன என்பது போல உட்கார்ந்த இருக்கைக்கு முன்னால் வந்தார் மாடசாமித்தேவர். 
        ‘ஒங்க வீட்டுக்கு தச்சுக் கழிச்சிட்டு போன பய, படுத்த படுக்கையா இருந்து செத்தும் போனான், கூட வந்த பய வாந்தி பேதியாயி திருநீறு போட்டு  ஒக்காந்திருக்கான், ஏதோ! தப்பு நடந்திருக்கு தேவதைங்க கோபத்துக்கு ஆளாயிருக்கு, அதான் தப்பு தப்பா நடக்குது’ என்றார் சுப்பையாஆசாரி.
        ‘அப்பம்! இதுக்கு என்ன செய்ய. எம் பொண்ணு வாழப்போற வீடு’ என்று மாடசாமித்தேவர் புலம்ப ஆரம்பித்தார்.
        ‘அய்யா நீங்க வேற அப்படினா ஒன்னுமிருக்காது, நீங்க எதுக்கும் பயப்படாதீங்க’ என்று கணேஷனிடமிருந்து கனிவான வார்த்தைகள் வெளிப்பட்டது.
       ‘என்ன வேணுமுனாலும் சொல்லுங்க செஞ்சிறுவோம், பரம்பரை பரம்பரையா.. பல தலைமுறைகள் வாழப்போற வீடு, நல்லா இருக்கனும், என்னனு சொல்லுங்க செஞ்சிறுவோம்’ என்று பயபக்தியுடன்  சொன்னார் மாடசாமித்தேவர்
       ‘அந்த தேவதைகளை சமாதானப்படுத்தி, மனம் குளிர வச்சிங்கினா அப்புறம் எல்லாம் சரியா போயிடும்’என்று அமானுசத்துடன் பேசுவது போல கும்பிட்டு கொண்டு சொல்ல ஆரம்பித்தார் சுப்பையாஆசாரி.
       ‘நீங்களே பார்த்து செஞ்சிட வேண்டிய தானே’ என்றார் மாடசாமி
        ‘எல்லாம் மீறி போச்சு இனி நானோ இங்குள்ளவங்களோ எவன் செஞ்சாலும் அவனுக்கு தான் பாதிப்பு அதிகம்  பாதி வேலை முடிஞ்சிருக்கு பாதி வேலை முடியல’ என்றார் சுப்பையாஆசாரி.
        ‘பீதி களையாதது போல வேற எதாவது வழி உண்டா’ என்று கடைசியாக கேட்டு விட்டார் மாடசாமித்தேவர்
         ‘தலைக்கு மேலே போனதால சக்தி மிக்க பூசாரிங்க அல்லது மந்திரவாதிங்க யாராச்சும் வச்சி பூசை போடுங்க, நல்லா தச்சுக் கழிச்சி உயிர் பலி கொடுங்க, அது வரை யாரும் அந்த வீட்டுக்கு ராத்திரி போகாதீங்க’ என்று சொல்லிய படி இனி சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது போல எழுந்தார் சுப்பையாஆசாரி.
  

தேவதச்சன் மண்ணிற்கு வந்து
தச்சி கழிச்ச போது
வனதேவதைகள் நடுத்தெருவில்
அனாதைகளாக்கப்பட்டார்கள்... 
9….
       மாடசாமித்தேவருக்கு தூக்கம் போச்சி, காலையில் எழுந்து அவசர அவசரமாய் போவார். சாய்ங்காலம் தான் வருவார், என்ன நடக்குது எது நடக்குது ஒன்றும் புரியவில்லை வீட்டில் உள்ளவர்களுக்கு. சில நேரம் சோர்ந்து வருவார், எங்கையாவது போன் டையல் செய்து பேசுவார். இடைஇடையே செத்த ஆறுமுகத்தைப் பற்றி ‘தேவடியா மவன் ஒழுங்கா செஞ்சிட்டு போலாமிலா, வேண்டாத வேலையா இது எனக்கு’ என்பார். திடீரென போன் வரும் சட்டையை மாத்திட்டு போவார். சோஸியர், பூசாரி  எனப் பார்த்தப்படி இரண்டு மூன்று நாள் போனது.
        ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்து ஒரு நம்பூதிரியைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு காரில் ஏறினார். டிரைவரிடம் ‘நேர வெள்ளங்கி சுப்ரமணியன் கடைக்கு போ!’ என்றதும் தயாராக நின்ற கணேஷனும் சுப்பையாஆசாரியும் காரில் ஏறிக் கொண்டனர். ஆலங்குளம் வழியாக தென்காசி போனது  ஆலங்குளத்தில் டீ வடை சாப்பிடும் போது… ‘அச்சங்கோயிலிருந்து வட கிழக்கா போனா அச்சன்புரம் தாண்டி மேக்கால போற காட்டுக்குள்ள உச்சிமாகாளி கோயிலில பூசை வைக்கிறாராம் அவர்ட்;ட போயி சொல்லுங்க  செய்வாரு, இல்ல வழியாவது கிடைக்கும்’ என்ற பேச்சு டிரைவருக்கு கேட்டது 
       தென்காசியிலிருந்து குத்துக்கல்வலசை கணக்குபிள்ளைவலசை பண்பொழி வழியாக அச்சங்கோவிலுக்கு போனார்கள் எவ்வளவு தான் தெளிவான முகவரி கிடைத்தாலும் அங்கே போயி விசாரிக்க வேண்டியது உள்ளது.
           ‘இ..ரோடு வழி.. நேரே போயா அந்னு கிலோ மீட்டர் கழிஞ்சிட்ட சிறியதோறு அம்பளம் வர்ரும்.. அஸ்தலம் திருஞ்சி மேற்கே நோக்கி போயால் அச்சன்புரம் வர்ரும்.. அவ்விடமிருந்து கொறச்ச தூரம் தான் போயா..’ என்றார் அந்த சாலைப் பயணி. 
      மரங்கள் அடர்த்தியான காட்டுப் பாதை. காடுகளின் இருப்பிடத்தில் நாம் தான் வந்து குடியமர்ந்து கொண்டு வனங்களை ஆக்கிரமிக்கிறோம் என்ற எந்த வருத்தம் இல்லாமல் உயிர் வாழ்கிறோம் என்ற எந்த நினைப்பும் வருவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும்.
     தேடி கண்டு பிடிச்சி கோயில் பக்கம் வரும் போது சாய்ங்காலமாகி இருந்தது. இரும்பாலான ஒரு ஆர்ச்சில் மலையாளத்தில் எழுதப்பட்ட கோயில் பெயர்  இருந்தது. நுழைவாயில் சிங்கத்துடன் இருபது அடி உயரத்தில் காளி. உள்ளே வேப்பமரத்தில் நாகங்களும் லிங்கங்களும் குங்குமத்தால் அபிசேகம் செய்தது போல காட்சி அளித்தது. சின்ன கோயில் தான். கோயிலுள்ளே சிவப்பு சேலை கெட்டி சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருப்பதை போல இருந்தாள் உச்சிமாகாளி. நம்பூதிரி பெயரைச் சொல்லி விசாரித்ததும்
      ‘இவ்விடம் இருக்கனும்’.. கோயில் உள்ளே சென்று வெண்தாடி, சிவப்பு வேட்டி கெட்டிக் கொண்ட, குடுமி போட்ட ஆளிடம் சொன்னான். உள்ளே வரச்சொல்லி உட்காரும்படி கைகளால் சைகை செய்தார். 
     ‘இவ்விடம் வந்த நோக்கத்தை பறயனும், ஏது காரியம் உண்டாகினும்  வள்ளிய கனகபூரணி உள்;ள அம்பளமிது ஏதும் பயப்பட வேண்டாம்’ என்று தமிழ் மலையாளம் கலந்த மொழியில் பேசினார்.
     கும்பிட்ட படியே நடந்த விவரத்தை மாடசாமித்தேவர் கூற முற்படும் போது, சில நேரம் திணரும் போதும், சுப்பையாஆசாரி எடுத்து கொடுத்தார்.. சாமி நீங்க வந்து எதாவது செய்யனும்..
      ‘பெரிய காரியமில்லை…   வீட்டில் குடியேறி விட்டது வனதேவதா, செஞ்ச தப்பான காரியத்தால வீட்ட விட்டு வெளியேற இல்லா’ செய்யோம். ஆனா ஒருபாடு செலவு உண்டாகும். இரண்டொரு நாள் அவ்விடம் தங்கி பூஜை செய்யனும், பின்னே ஞன்னால் எதையும் செய்யமுடியும். 
     ‘உங்களுக்கு எந்த கொறையுமில்லாமல் நான் பார்த்துக்கிறேன் என்ன செலவானாலும் சரி’ என்றார் மாடசாமித்தேவர்
     ‘அதற்கு குழப்பில்லா… ஒரு உயிர இல்ல, ரெண்டு உயிர எடுத்திட்டு போயா. ரத்த(சோறு) வாச கண்டு சுத்துன்னு.. ஞான் பூஜை செய்யா போல், தச்சுக் கழிக்க ஒரு ஆள் வேணும். ஞான் பக்க பலமா இருப்பே’ என்று கூறினார் நம்பூதிரி.
     சுப்பையாஆசாரி சாமியாடி என்பதும், இவர் தான் எல்லா விவரத்தையும் சொன்னார் என்பதையும், சொன்னார் மாடசாமித்தேவர். உடனே.. குங்குமத்தை சுப்பையாஆசாரியிடம் கொடுத்தார்.  
          ‘நாட்டி சென்றிட்டு எல்லா காரியங்கலோக்க செய்திடு, எங்களுக்கு யாத்திரை செய்ய எல்லா பரிபாடிகளையும் நின்டையனும். பூஜை செய்ய சாதனங்களும் பின்ன அட்வான்ஸ்சும் தரனும், அட்ரஸையும் கொடுத்திட்டு போயா, செவ்வாய் ராவில எங்கல அவ்விடம் உன்டாகும், வெள்ளி அயிச்ச வேலையை முடிச்சிட்டு இறங்கும்’ என்று ஒரு சிவப்பு கயிற அவரவர் கைகளில் கெட்டி விட்டு  ‘எங்கல வந்திருவோம் நீ போய் கா’ என்றார் நம்பூதிரி.
     பெரும் தொகையை கெட்டி விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். தேவையான ஏற்பாட்டை திங்கட்கிழமை செய்து வைத்துவிட்டு, போன் தகவல் போயி சேர்ந்தது ‘நாளை அதி ராவுல நிங்கள் ஊர் பக்கம் வந்னு நிற்போம் வந்னு கூட்டிச் செல்;’ என்றார் நம்பூதிரி. 
     செவ்வாய்க்கிழமை காலை மாடசாமித்தேவர் வீட்டு முன்னால் வந்து நின்ற காரில் நம்பூதிரி இறங்கவில்லை நாளை இவ்விடம் வந்து எல்லா கரியம் சம்சாரிக்கா, வண்டி  கேறுங்க புதிய வீடு கண்டுட்டு வாரா’ என்றார்.
      மாடசாமித்தேவர் வீட்டில் தயாராக நின்ற சுப்பையாஆசாரியும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள்;.
      புதியதாக கெட்டிய வீட்டைச்சுற்றி வந்து விட்டு ஊரில் பக்கத்தில் உள்ள கோயிலையும் விசாரித்தார். ‘வைகைய நேரம் பகவதிபேராச்சிஅம்மே வந்ஞ பொங்கல் செய்ய அதன்ட காரியங்கள் ஏற்பாட்டைச் செய்னு’ என்றார் நம்பூதிரி. அதன்படி அன்று அந்த பேராச்சிஅம்மனுக்கு பூசையுடன் பொங்கலிட்டு முடிக்கவும் பட்டது.
     நல்ல படியாக இந்த நாள் முடிந்தது. மறுநாள் புதன் கிழமை புதிய வீட்டைச் சுற்றி சில வகை மரங்களான செடியைப் பெயருக்கு நட்டு வைத்தார். அவை அனைத்தும் வேப்பமரம் என்பது தெரிந்தது. வீட்டு வாசலுக்கு முன்னால் வந்து ஒரு தேங்காய்க் கெட்டிய சுருக்கு பையை இடது புறமாக ஒரு குழிதோண்டி வைத்தார். திருநீறு,குங்குமம் தூவி மண்ணைப் போட்டு மூட சொன்னார்.
       இவை எல்லாம் பார்த்து கொண்டே இருந்தார்கள் மாடசாமித்தேவர் வீட்டில் உள்ளவர்களிடம் ‘நாளை வியாழம் ராத்திரி நின்ன வீட்டில் ஒரு பூஜை செய்திட்டு நேரா நைட் நின்ன புதிய வீட்டி வந்திருதா, அன்ன ராத்திரி பூஜை செய்ய அத்தியாவசிமாய்ட்டு ஒரு நாடங் கோழி வேணும்.பாக்கிய எல்லா சாதனங்களும் இ..சீட்டில் எழுதிட்டுண்டு, ஒன்னு பறயனும் கேட்டுக்கோ. ஞாங்கள் பூஜை செஞ்சி முடிச்சிட்டு இவ்விடம் வர யில்ல. அப்படியே எங்க ஊரக்கு போயி. அதனால மத்த செட்டில் மண்டை முடிச்சிடனும். ஞான் பூஜை செஞ்சிட்டு போன பிற விடியற்காலையில் சமயம்அஞ்சு வந்னு, வீட்டு வாசல தொட்டு வெல்லம் ஒழிச்சிட்டு உள்ளே போயா, நிங்கள் வெல்லத்தில மீதிதன்னில் நடக்கனும், வெல்லம் ஒழிஞ்சி எல்லா மொறியும் கழுகி விடனும், யாதோறு சாதனமும் தொடருது கூடாது? ..என்ன மனசுலாச்சோ’ என்றார் நம்பூதிரி.
      சரியென்று தலையை ஆட்டினர்
      ‘நிங்கள் கெட்டும் வீட்டில் புகுந்த தேவதா ஆதியில வந்த தேவதா யல்ல பாதியில் வந்த தேவதா நிங்கள் கொண்டு வந்த ஈட்டி மரத்தில வாழ்ந்த வனதேவதா இவ்விடம் வந்து… ‘அப்பொழுது தான் மாடசாமித்தேவருக்கு மரக்கடை ஓனர் சொன்ன மரப்பெயர் ஞாபகம் வந்தது ஆமாம்! இதே! பெயர்தானே’ பலி செய்த காரியம் அ..புத்திமுட்டாய் விவகாரமாய் போய்’ என்று சாமி பூசையின் போது அருள் வந்த நிலையில் நம்பூதிரி கூறினார்
      எப்போதும் போல சரிங்க என்று மட்டுமே சொன்னார்கள் மாடசாமித்தேவர் வீட்டில் உள்ளவர்கள் 
       ‘ஒன்னு பறயனும்’.. ஏய்! சுப்யாஆச்சாரி நாளை இவ்விடம் வரும் போ.  ‘இந்த எலுமிச்சையை உன் இடுப்பில் ஒரு வெள்ள துணி கொண்டு கெட்டி வரும். இந்தா பிடி’ என்றதும். ஓரே ஒரு வேண்டுகோள்.. வனதேவதா சாந்தம் செய்யா அது கேட்கறத கொடுக்க, அது எந்து சோதிச்சாலும் ஞமக்கு  கொடுக்க, நிங்கள் சம்மதிக்கனும்’ என்றார் நம்பூதிரி.

    தேவதச்சனின் ஆணையால் 
கொரூரப் புத்தி  பெற்ற தேவதைகள் 
சாப விமோச்சனத்தால்  கோயிலாச்சி...


10…
       வெள்ளி இரவு பதினொரு மணிக்கே மலையாள நம்பூதிரியின் ஆட்கள் வந்திறங்கினார்கள் தேவையான சாமான்களை எடுத்து வைத்தார்கள். சில பல உருவங்கள் கெட்டித்த தயிர் டப்பாவையும், இலை போன்ற கிண்ணத்தில் சிக்கனோ? மட்டனோ? தெரியவில்லை எடுத்து வைத்தார்கள். வாசம் முக்கை வருடியது என்றே சொல்ல வேண்டும். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்தே வீட்டிற்குள் போனார் நம்பூதிரி கூட சுப்பையாஆசாரியும் போனார் 
     நம்பூதிரி கூட வந்தவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்கள் வெளியே கிளம்பினார்கள். கிழக்கு மேற்கு முகமாக இருபெரிய இலைகள் சாதாரண இலைபோல இல்லாமல் நல்லா பச்சையா அகலமா இருந்தது ஊரிலிருந்து வரும்போது கொண்டு வந்திருப்பாங்களோ என யோசிக்க வைத்தது, பழம், பத்தி, சூடன், வெத்தலை பாக்கு, பொறி,கடலை அரிசி ஒருஇலையில் இருந்தது, மறு இலையில் மாமிசத்துடனான வெத்தலை, பாக்கு பழம் இருந்தது. 
     இலை முன் தரையில் அமர்ந்து சில பல மந்திரங்களைச் சொன்னார்,
     சந்தனம் குங்குமத்தை எல்லா கதவுகளிலும் வைக்க சொல்லி எழுந்தார் சுப்பையா சந்தனம் வைக்க, கூட இருந்தவன் குங்குமம் வைக்க, பின்னால் நடந்து கொண்டே ஒரு மண் குடுவையில் உள்ள தண்ணீரை தொளித்த வண்ணம் வந்தார் நம்பூதிரி. மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்து பூஜை செய்தார். பொங்கி எடுத்து கொண்டு வந்திருக்கும் சர்க்கரைப் பொங்கலை இலையின் ஓரத்தில் கொட்டினார், தயிரையும் கையால் எடுத்து வீசினார். திறந்திருந்த முன் கதவு படார்னு அடிச்சது பயத்தில் சுப்பையாஆசாரியும் பூசாரியின் ஆளும் திரும்ப, எந்த சலணமுமில்லாமல் நம்பூதிரி இருந்தார். 
     மணி பனிரெண்டை எட்டும் போது இருக்கிற பூக்களை எடுத்து வீசினார், தயிரையும் வீசினார், மாமிசத்தை இலையில் கொட்டினார், தெற்கு திசையில் ஒரு முட்டைமட்டும் உருண்டு போயிட்டு நின்றது.  உடனே… ‘சாப்பிட வரனும், சாப்பிட வரனும், சாப்பிட வரனும் என்று மூன்று முறைக்கு மேலே சொன்னார், நினக்கு என்த வேண்டிங்கினும்; திருப்தியா செய்யான்’.. என்று எழுந்து தெற்குத் திசை பக்கம் நடந்து தன் உடலில் உள்ளஒவ்வொரு துணியையும் கழற்றிப் போட, கூட வந்த ஆள் இரண்டு குடம் தண்ணீரை நம்பூதிரியின் மேல் ஊற்றினான். சாப்பிட வரனும் என்த வேணும்? என்றார். சுப்பையாஆசாரி பயம் கூடிய பக்தியில் நின்றார் 
     ‘ஆ…சொல்லு அம்மே..’…….

     ‘சொல்லு.. அம்மே..’…….

     ‘சரி செஞ்சிடுறோம் அம்மே..’…..

     ‘அப்படியே செஞ்சிடுறோம்  அம்மே..’….. என்று மட்டுமே விட்டு விட்டு பேசினார் பூசாரி. அதுவரையும் அவர் நிர்வாணத்தில் தான் நின்றார் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.
      ‘ஏ! சுப்பையாஆசாரி.. கொறச்ச இவ்விடம் வரனும்.. வந்திருக்கும் தேவதைக்கு சந்தோசமாம், வீடு இன்னும் விருத்தியா இருக்குமாம், போன முறை ரத்த பலி கொடுக்க, படையல் செஞ்சது, மூனாமாளுக்கு கொடுப்பதாக கொடுத்தான். தூணில் இருந்து வீட்டு வாசல மறிச்சி பறவை உயிரால் தடுத்திட்டான். சந்தோசமா கொடுக்கிர படையலை சந்தோசமா தரல, அதான் அவன் முன்னே முட்டையைத் தூக்கி ஏறிஞ்சிட்டேன். நீ எனக்கு நல்ல படியா செஞ்சிட்ட  உனக்கு துணையா இருப்பேன். நான் இங்கே புதைஞ்சதனாலே எனக்கொரு பீடம் போடு, குடும்பம் குட்டிகளுக்கு நோய் நொடி வராமல் பார்த்து கொள்ளுகிறேன்’ என்று நம்பூதிரி அருள் நிலையில் தமிழில் மட்டும் பேசினார்.
      எழுந்த நம்பூதிரி சுப்பையாவிடம் முட்டை ஒன்றையும் எலுமிச்சைப் பழம் ஒன்றையும் இடுப்பில் கெட்ட சொன்னார் கோழியை வெளியே கொண்டு போயி பலியிட்டிருங்க என்று ஈர வேட்டியைக் கெட்டினார். தன் ஆளிடம் முச்சந்தியில் இலை பழம் வெத்தலை முட்டை எடுத்து கொண்டு  சுப்பையாஆசாரி ஏற்கனவே கூறிய இடத்தில் வந்து தச்சுக் கழிச்சிட்டு போனார்.
      மறு நாள் சுப்பையாஆசாரி கணேஷனுடன் மாடசாமித்தேவர் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்ல சொல்ல பீதியும் பயமும் கேட்டு கொண்டிருந்தவர்களிடம் ஸ்தம்பித்து நின்றது.. 
      ‘சாமி கேட்டதைச் செய்யனும், சாமி நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிறது நமக்கு தானே பாதுகாப்பு’ என்று மாடசாமித்தேவர் மகள் தன் தந்தையைப் பார்த்து கூறினாள்.
       முன்னால் இருந்த தூண் கோயிலுக்குப் போனது, கணேஷன் கடை வேம்பு மரம் நெலயா உருவாச்சி, மாடசாமித்தேவர் புதிதாக கெட்டிய வீட்டிற்கு மேற்குப் பகுதியில் கிடந்த இடத்தில் ஒரு பீடம் விழுந்து கோயிலாச்சி, மாடசாமித் தேவர் வரும் போது போகும் போதும் கும்பிட்டு வருவார் போவார். பூடம் கோயிலாச்சி, ஊர் பெருசாச்சி,ஊருக்கே படியளக்கும் சாமியாச்சி, பூசாரி வந்தார் பூஜைகள் நடந்தது, மாடசாமித்தேவர் மருமகன் தலையெடுக்க கோயிலுக்கு கொடை கொடுக்க ஆரம்பித்தார்கள். இன்று மாடசாமித்தேவர் இல்லை,வெள்ளச்சாமி இல்லை, சுப்பையாபிள்ளை இல்லை, சுப்பையாஆசாரிக்கு அதிக வயசானது, காலம்  மாறிபோச்சி எந்த அடிச்சுவடும் இல்லாமல்… 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்